புத்ராஜெயா: கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க, நோன்பு பெருநாள் கொண்டாட்டத்திற்கான பொது விடுமுறைகளை ஒத்திவைப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதாக மலேசியா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமிய விவகார அமைச்சரின் கருத்துக்களைப் பெற்ற பின்னர் இதுகுறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று கூறினார்.
மார்ச் 17ஆம் தேதிக்குப் பிறகு நேற்று முன்தினம் மலேசியாவில் கிருமித் தொற்றால் எந்த மரணமும் பதிவாகாத நிலையில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்கம், இந்தோனீசியாவின் அணுகுமுறையைப் பின்பற்றுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த இஸ்மாயில், இஸ்லாமிய விவகார அமைச்சர் இதுபற்றி தனது கருத்துகளையும் திட்டத்தையும் தெரிவிப்பார் என்றார்.
நோன்புப் பெருநாளைப் பற்றி மட்டுமல்ல, ரமலான் மாதத்திற்கான சிறப்பு மாலை நேரத் தொழுகை போன்ற பிற விஷயங்கள் குறித்தும் அமைச்சு ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக நேற்று காலையில், இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பெருநாள் கொண்டாட்டத்திற்காக மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பவுதற்குத் தடை விதித்தார்.
வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நோன்பு காலத்தைத் தொடர்ந்து மே மாதம் 24ஆம் தேதி நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்காக மலேசியாவில் ஒரு வார கால விடுமுறை அளிக்கப்படும் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம்.
ஆனால் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, மலேசியாவில் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன.
மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டு, 35வது நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாட்டு உத்தரவு வரும் 28ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.

