உலக சுகா­தார நிறு­வ­னம்: புது வழக்கத்துக்கு தயாராகுங்கள்

உலக சுகா­தார நிறு­வ­னம்: புது வழக்கத்துக்கு தயாராகுங்கள்

2 mins read
1244bae3-7f27-4355-91fe-055c55613572
விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டா­லும் புதிய வழக்­க­நி­லைக்கு மக்­கள் தயா­ராக இருக்க வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. படம்: ஏஎப்பி -

மணிலா: கொ­ரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட விதி­மு­றை­களை சில ஆசிய பசி­பிக் நாடு­கள் தளர்த்த திட்­ட­மிட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டா­லும் புதிய வழக்­க­நி­லைக்கு மக்­கள் தயா­ராக இருக்க வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

பாது­காப்­பான இடை­வெ­ளி­யைக் கடைப்பிடித்தல் போன்ற முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் தொட­ரக்­கூ­டும் என்று கூறிய உலக சுகா­தார நிறு­வ­னம், அதற்கு மக்­கள் தயா­ராக இருக்க வேண்­டும் என்றும் தெரி­வித்­தது.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு முந்­திய நிலை உட­ன­டி­யாக திரும்­பாது என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் மேற்கு பசி­பிக் வட்­டார இயக்­கு­நர் டாக்­டர் டகாஷி காசாய் இணை­யம் வழி நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

"புதிய வாழ்க்­கை­மு­றைக்கு நாம் அனை­வ­ரும் தயா­ராக வேண்­டும். இந்த நிலை எப்­போது வரை நீடிக்­கும் எனத் தெரி­ய­வில்லை. கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க எடுக்­கப்­படும் உத்­தி­கள் தொடர வேண்­டும். குறைந்­தது கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­கான தடுப்­பூ­சி­யைக் கண்டு­பி­டிக்­கும் வரை அல்­லது பல­ன­ளிக்­கும் சிகிச்சை முறை கண்­டு­பி­டிக்­கப்­படும் வரை நாம் புதிய வழக்­கத்­துக்­குத் தயா­ராக வேண்­டும்," என்­றார் டாக்­டர் காசாய்.

கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட முடக்­க­நி­லை­யைப் படிப்­ப­டி­யா­கத்­தான் தளர்த்த வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­தது.

கட்­டுப்­பா­டு­களை உட­ன­டி­யாக முற்­றி­லும் தளர்த்­தி­னால் அது ஆபத்­தாக முடிந்­து­வி­டும் என்றும் பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் அது கூறி­யது.

முடக்­க­நி­லை­யைத் தளர்த்த எண்­ணம் கொண்­டி­ருக்­கும் அர­சாங்­கங்­கள் அதை மிகுந்த கவ­னத்­து­டன் படிப்­ப­டி­யா­கச் செய்ய வேண்­டும் என்றும் கிரு­மித்­தொற்று நிலை­மையை அது மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்க வேண்­டும் என்றும் டாக்­டர் காசாய் கூறினார்.

இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்று தொடங்கிய இடம் குறித்து தற்போதைக்கு உறுதி செய்வது சாத்தியமல்ல என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.