10 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிய இளம்பெண்; கொரோனா தொற்று நோயாளிகளுக்காக விட்டுக்கொடுத்த மனிதநேயம்

2 mins read
8e0c6722-43b6-49d5-bc12-b125f31294bb
இம்மாதம் 15ஆம் தேதி அவரது பிறந்தாள் கொண்டாடப்படவிருந்தது. ஆனால், முன்னதாகவே அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி தம்முடைய பிறந்தநாளைக் கொண்டாடுமாறு கோரிக்கை வைத்தார் செல்சி. படங்கள்: மலேசிய ஊடகம் -

கொரோனா கொள்ளைநோயால் மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளிட்ட வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் ஒருவர், தம்முடைய படுக்கையை விட்டுக்கொடுத்து வீட்டிலிருந்தவாறே சிகிச்சையைத் தொடர முடிவெடுத்தார்.

பினாங்கில் இருக்கும் பாலிக் புலாவ்வில் உள்ள கல்லூரியில் பயின்றுவந்த செல்சி சிண்டியன் எனும் அந்த மாணவிக்கு 14 வயதாக இருந்தபோது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது அளித்த சிகிச்சை காரணமாக அவர் குணமடைந்தாலும் ஈராண்டுகளுக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் தலைதூக்கியது.

ஒரு சில மாதங்களே உயிர் வாழ்வார் என்று அப்போது மருத்துவர்கள் கணித்ததையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, அடுத்த 7 ஆண்டுகளுக்கு மன தைரியத்தோடு நோயுடன் போராடி வாழ்ந்துவந்தார் செல்சி.

கிருமித்தொற்று காரணமாக நூற்றுக்கணக்கில் நோயாளிகள் மருத்துவமனைகளை நாடி வருவதையும் சுகாதாரப் பராமரிப்புத் துறை திணறுவதையும் கண்ட செல்சி, தாமாக முன்வந்து, தம்மை வீட்டுக்கு அனுப்புமாறும் வீட்டிலிருந்து சிகிச்சை எடுக்க விரும்புவதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

அவரது வேண்டுகோளுக்கிணங்கி வீட்டுக்குச் சென்ற அவர் கடந்த இரு மாதங்களாக சிகிச்சையைத் தொடர்ந்து வந்தார்.

இம்மாதம் 15ஆம் தேதி அவரது பிறந்தாள் கொண்டாடப்படவிருந்தது. ஆனால், முன்னதாகவே அதாவது ஏப்ரல் 4ஆம் தேதி தம்முடைய பிறந்தநாளைக் கொண்டாடுமாறு கோரிக்கை வைத்தார் செல்சி.

ஏப்ரல் 5 அன்று அதிகாலை 1.25 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. "கீமோதெரபியுடனான எனது பயணம் மிக நெடியது," என்பதே அவரது கடைசி வார்த்தைகளாகின.

தேவை அதிகமுள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கு தமது படுக்கை உதவும் என்று தம்மிடம் கூறிய மகள், புன்னகை தவழ்ந்த முகத்துடன் இவ்வுலகை விட்டு நீங்கியதாக செல்சியின் தந்தை குறிப்பிட்டார்.

சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus

குறிப்புச் சொற்கள்