பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூர் அரசாங்கம் கொரோனா கிருமித்தொற்று அதிகரிப்பு காரணமாக ஜூன் 1 வரை கட்டுப்பாட்டு நட வடிக்கைகளை நீட்டித்துள்ளது.
என்றாலும் சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பும் மலேசிய ஊழியர்கள் அதிக அளவில் இல்லை என்று மலேசியாவின் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தொழிற்சாலைகள் இன்னமும் செயல்படுகின்றன. மூடப்பட்டு இருக்கின்ற தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை அவற்றில் வேலை செய்யும் மலேசியர்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கி இருக்கலாம் என்று சிங்கப்பூர் அரசு அனுமதித்து இருக்கிறது என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
சிங்கப்பூரில் சம்பளம் இல்லாமல் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ள மலேசிய ஊழியர்கள் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்களா என்பதை சிங்கப்பூர் அதிகாரிகளுடன் பேசி தெரிந்துகொள்ளும்படி மலேசியாவின் மனிதவள அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இருந்து ஒரே நேரமாக இல்லாமல் கட்டம் கட்டமாக மலேசியர்கள் நாடு திரும்பலாம் என்று இரண்டு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டில் புதிதாக 50 பேரை கொரோனா கிருமி தொற்றியது என்று மலேசிய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
அவர்களையும் சேர்த்து மலேசியாவில் 5,532 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். புதிதாக ஒருவர் மாண்டுவிட்டதாகவும் பலியானவர்கள் எண்ணிக்கை 93 என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவ்வேளையில், மலேசியாவில் ஈப்போ, ஜாலான் துன் அப்துல் ரசாக்கில் செயல்படும் உணவகம் ஒன்றில் மதுவுடன் விருந்துண்டதாக நம்பப்படும் பத்து இந்திய ஆடவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு வயது 19 முதல் 44 வரை என்று ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர் அஸ்மாடி அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
கைதானவர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதாக ஒப்புக்கொண்டதாகவும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த உணவு நிலையத்தின் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

