துபாய்: வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், பலியானவர்களில் பெரும்பாலோனர் வெளிநாட்டு ஊழியர்கள் என்று சுகாதார அமைச்சுகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், நேப்பாளம் மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஐக்கிய அரபு சிற்றரசுகள் மற்றும் வளைகுடா நாடுகளின் மருத்துவமனைகள், வங்கிகள், கட்டுமானத் துறைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் மில்லியன் கணக்கான வெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர்.
இங்கு கிருமித் தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து 26,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 166 பேர் மாண்டனர்.
கிருமித்தொற்றுக்குப் பலியானவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறப்படும் நிலையில், அவர்களது சடலங்கள் சொந்த ஊருக்குத் திருப்பி அனுப்பப்படுவது இல்லை.
அவர்களது இறுதிச் சடங்குகள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என கடைசி விடையளிக்க யாரும் இல்லாமலேயே நடைபெறுகிறது.
"உலகம் மாறிவிட்டது. மாண்டவர்களுக்கு விடையளிக்க யாரும் வருவதில்லை. இப்பொழுதெல்லாம் தனியாகவே இறக்கிறார்கள்," என்றார் துபாயின் தெற்கு பகுதியில் உள்ள இந்து தகன பூமியின் மேலாளர் ஈஸ்வர் குமார்.
கொரோனா தொற்றால் இறந்த 50 வயது இந்திய ஆடவர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு யாராவது வருவார்கள் என்று காத்திருந்தபோதும், ஒருவரும் வராத நிலையில் தகன பூமி ஊழியர்களே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இந்தியா விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளதால், கிருமித்தொற்று தவிர வேறு காரணங்களால் இறந்தவர்களின் உடல்களையும் சொந்த ஊருக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

