வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த குளிர்காலத்தின்போது அங்கு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அது இன்னும் அதிக அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும் அந்நாட்டின் சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையத்தின் இயக்குநரான ராபர்ட் ரெட்ஃபீல்ட், அமெரிக்கர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள அடுத்த சில மாதங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார்.
"நம் நாட்டில் அடுத்த குளிர்காலத்தின்போது மீண்டும் ஒருமுறை கொரோனா கிருமித்தொற்று அலையடிக்க வாய்ப்புள்ளது. இப்போது நாம் எதிர்கொள்வதைக் காட்டிலும் அது இன்னும் மோசமானதாக இருக்கும்," என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின்போது திரு ரெட்ஃபீல்ட் தெரிவித்தார்.
"சளிக்காய்ச்சல் தொற்றையும் கொரோனா கிருமித்தொற்றையும் ஒரே நேரத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில் ஏற்கெனவே 800,000க்கும் மேற்பட்டோரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது. அதனால் மாண்டவர்களின் எண்ணிக்கையும் 45,000ஐத் தாண்டிவிட்டது.
வீட்டிலேயே இருக்கும்படியான உத்தரவாலும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களும் பள்ளிகளும் மூடப்பட்டு இருப்பதாலும் அமெரிக்காவில் கிருமிப் பரவலை மெதுவடையச் செய்திருப்பதாக திரு ரெட்ஃபீல்டும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
ஆயினும், அந்தக் கட்டுப்பாடுகள் அமெரிக்கப் பொருளியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தது 22 மில்லியன் பேர் கடந்த நான்கு வாரகாலமாக வேலையின்றித் தவிக்கின்றனர்.
இந்நிலையில், முடக்க நடவடிக்கைகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என திரு ரெட்ஃபீல்ட் வலியுறுத்தி இருக்கிறார்.
அதே நேரத்தில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைந்து அடையாளம் காணும் வகையில் சோதனை முறையை முடுக்கிவிட வேண்டும் என்றும் தடமறிதல் மூலம் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய வேண்டும் என்றும் பொதுச் சுகாதார அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் மக்கள் போராடி வருவது குறித்தும் அதற்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளது குறித்தும் திரு ரெட்ஃபீல்டிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, "அது கைகொடுக்காது," என்று அவர் பதிலளித்தார்.
நாடு தழுவிய தடமறிதல் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் புதிதாக கிருமித்தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்றும் அந்தப் பணிகளில் கிட்டத்தட்ட 300,000 பேர் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

