உணவுப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் வடகொரிய மக்கள்

உணவுப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் வடகொரிய மக்கள்

1 mins read
d86401d0-1f48-4952-b715-d24c5ef71c6a
பியோங்யாங்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொரோனா கட்டுப்பாட்டு  நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்கலாம் என்று கூறப்படுகிறது. வட கொரியாவின் முன்னாள் தலைவரின் 108வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்திய மக்கள் (முகக்கவசத்துடன்). படம்: ஏஎஃப்பி -

வடகொரியாவின் பியோங்யாங் நகர மக்கள் பீதியில் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதாகவும் அதனால் சில கடைகள் காலியானதாகவும் வடகொரியச் செய்திகளை வெளியிடும் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட என்கே செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மக்கள் இப்படி பொருட்களை வாங்கிக் குவிப்பதற்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதாகக் கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று அந்த செய்தி கூறுகிறது.

அதேவேளையில், பியோங்யாங்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக மக்கள் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு மட்டுமே பற்றாக்குறை நிலவிய நிலையில், தற்போது மற்ற பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது அச்செய்தி.

மக்கள் உணவுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதால், வடகொரியாவில் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகக் கடந்த வாரம் ரேடியோ ஃப்ரி ஆசியா செய்தி நிறுவனம் கூறியிருந்தது.

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை என்பது புதிது அல்ல என்றும் 1990களில் அங்கு நிலவிய பஞ்சம் காரணமாக 10 விழுக்காட்டு மக்கள் மடிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கிம் உடல்நலமில்லாத நிலையில், அவரது பரம்பரையினர் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும்போது வன்முறை வெடிக்கக்கூடும் என்ற யூகங்களும் நிலவுகின்றன.