ஸ்பெயினில் அதிக உயிரிழப்புகள்
மட்ரிட்: ஸபெயினில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாண்டோர் எண்ணிக்கை நேற்று 440ஆக பதிவானது. இதுவே கடந்த ஒரு வாரத்தில் பதிவான ஆக அதிக உயிரிழப்பு. மேலும் நேற்று மேலும் 4,635 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவசரநிலையை அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை ஸ்பெயின் நீட்டித்துள்ளது.
உறவினர்கள் வரவில்லை; இறந்தோரை அடக்கம் செய்த மிலான் அதிகாரிகள்
மட்ரிட்: இத்தாலியின் லொம்பார்டி மாநிலம் கொரோனா கிருமித்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நோயின் காரணமாக கிட்டத்தட்ட 13,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கிருமித்தொற்றால் மாண்ட ஏறத்தாழ 60 பேருடைய உடல்களை உறவினர்கள் வராததை அடுத்து, அம்மாநிலத்தின் தலைநகரான மிலானின் அதிகாரிகளே நேற்று அடக்கம் செய்தனர்.
முடக்கநிலையை நீட்டித்துள்ள கிரேக்கம்
ஏதென்ஸ்: கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அதன் முடக்கநிலையை கிரேக்கம் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. அடுத்த மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அது தெரிவித்தது.
நெருக்கடியை சமாளிக்க $15.4 பி. திட்டம்
பெர்லின்: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மனியின் பொருளியலை மேம்படுத்த $15.4 பில்லியன் பெறுமானமுள்ள திட்டத்துக்கு அந்நாட்டுப் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இணங்கியுள்ளார். இந்நிலையில், பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போதும் கடைகளுக்குச் செல்லும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஜெர்மன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
புயல்: குறைந்தது ஐவர் மரணம்
ஹியூஸ்டன்: அமெரிக்காவின் ஒக்கலஹோமா, டெக்சஸ் மாநிலங்களைப் புரட்டிப் போட்ட புயலின் காரணமாக குறைந்தது ஐந்து பேர் மாண்டனர், பலர் காயமுற்றனர் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.

