மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்கெனவே நடப்பில் உள்ள முடக்கத்தை மே 15ஆம் தேதி வரை நீட்டிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே உத்தரவிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதன்மூலம் மணிலாவின் முடக்கநிலை நான்கு வாரங்களாக நீள்கிறது.
கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த உலகிலேயே ஆகக் கடுமையான சமூகத் தனிமை நடவடிக்கை மேற்கொள்ளும் நகரங்களில் ஒன்று மணிலா.
இங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அதிக கிருமிப் பரவல் காணப்படும் மற்ற வட்டாரங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்றும் முன்னேற்றம் காணப்படும் இடங்களில் அவை படிப்படியாக விலக்கப்படும் என்றும் ஹேரி ராக் எனப்படும் அந்தப் பேச்சாளர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மணிலாவின் முடக்கத்தை நீட்டிப்பதற்கான முடிவு எடுப்பதற்காக நேற்று முன்தினம் பின்னேரத்தில் நெருக்கடி நிலை சமாளிப்புக் குழு கூட்டத்தை அதிபர் கூட்டினார். அந்த நிகழ்வைக் காட்டும் நிழற்படங்களை அரசாங்கத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
கொரோனா கிருமியை ஒழிப்பதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பிலிப்பினோ குடிமகனுக்கு 50 மில்லியன் பெசோ (US$986,000) வெகுமதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை இந்தக் கூட்டத்தில் திரு டுட்டர்டே வெளியிட்டார்.
"நாம் அனைவரும் இக்கட்டில் இருக்கிறோம். ஆபத்தை அதிகரிக்கக்கூடிய செயல்களில் மக்கள் ஈடுபட வேண்டாம்," என்று கூறிய அதிபர் யாரும் மெத்தனம் காட்டக்கூடாது என்று எச்சரித்தார்.
மணிலா நகரம் மக்கள் நெருக்கம் மிகுந்துள்ள பகுதி. கிட்டத்தட்ட 13 மில்லியன் பேர் வசிக்கும் நிலையில் குடியேறிகளும் பல மில்லியன் பேர் உள்ளனர். அதன் காரணமாக கொரோனா கிருமி அங்கு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 6,981 பேரிலும் 462 மரணங்களிலும் மூன்றில் இரு பகுதி மணிலாவில் நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒழித்துவிடுவேன்: அதிபர் கடும் எச்சரிக்கை
அரசாங்கம் அறிவித்துள்ள முடக்கநிலை கட்டுப்பாடுகளை மக்கள் மீண்டும் மீண்டும் மீறுவது குறித்து எச்சரிக்கை விடுத்த பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, நோய்ப்பரவலை கட்டுக்குள் கொண்டுவர இதுபோன்ற மீறல்கள் தடுப்பதாகக் கூறினார்.
மேலும், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களையும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருப்போரையும் பாதுகாத்து வரும் போலிஸ் மற்றும் ராணுவப் படையினர் மீது மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவது குறித்து அதிபர் கடுமையாக விமர்சித்தார்.
"உங்களை (மாவோயிஸ்ட்களை) கட்டுப்படுத்த ராணுவச் சட்டத்தை நான் அமல்படுத்துவேன். அதில் மாற்றம் இல்லை. எனது பதவிக்காலம் முடிய இன்னும் ஈராண்டுகள் உள்ளன. அதற்குள் உங்கள் அத்தனை பேரின் கதையையும் முடிக்க முயற்சிப்பேன்," என்றார் அவர்.

