வாஷிங்டன்: கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் வேலையிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை, 1930களில் ஏற்பட்ட மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கடந்த ஐந்து வாரங்களில் 26 மில்லியன் பேர் வேலையிழந்தோருக்கான சலுகையைப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்காவின் மிகப்பெரிய 10 நகரங்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்குச் சமமாகும்.
சென்ற வாரத்தில் மட்டும் 4.4 மில்லியன் பேர் சலுகைக்காக விண்ணப்பம் செய்துள்ளனர். வியாழக்கிழமை வெளியான புதிய புள்ளிவிவரங்களின்படி கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஆறு அமெரிக்கர்களில் ஒருவர் வேலையிழந்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க உணவு வங்கியில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
1929ல் தொடங்கி 1930 வரை நீடித்த பொருளாதார மந்தநிலையின் போது நான்கு அமெரிக்கர்களில் ஒருவருக்கு வேலை பறிபோனதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, அமெரிக்க நாடாளுமன்றம் கிட்டத்தட்ட 500 பில்லியன் அமெரிக்க டாலர் ஊக்குவிப்பு நிதிக்கு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதேபோல், சென்ற மாதம் இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர் ஊக்குவிப்பு நிதி அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் இதுவரை 886,709 பேருக்குக் கிருமித்தொற்று பரவியுள்ளது. 50,243 பேர் பலியாகினர்.

