அட்லாண்டா: அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக 51,000 பேருக்கு மேல் இறந்துள்ள நிலையில், அறுவரில் ஒருவர் ேவலையின்றி தவிக்கும் நிலையில், அந்நாட்டின் சில மாநிலங்கள் முடக்கநிலையை தளர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதில் குறிப்பாக, ஒக்லஹோமா, ஜார்ஜியா போன்ற மாநிலங்கள், மருத்துவ நிபுணர்கள் சிலரின் அறுவுரையையும் மீறி, சில வகையான வர்த்தகங்களை அனுமதிக்கும் போக்கை நேற்றிலிருந்து மேற்கொண்டு வருகின்றன.
முடக்கநிலையை அவசரப்பட்டு தளர்த்துவது கிருமித்தொற்று அதிகரிக்கவும், மரண எண்ணிக்கை அதிகரிக்கவும் வழிவிடக்கூடும் என பொது சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை செய்தும், உடலுறுதி மையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், பச்சை குத்தும் மையங்கள் ஆகியவற்றோடு மற்ற பல வேலையிடங்களும் தங்களது வழக்கமான சேவையை வழங்க ஆரம்பிக்க ஜார்ஜியா ஆளுநர் பிரயன் கெம்ப் அனுமதி அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் முடக்கநிலையை எவ்வளவு சீக்கிரம் தளர்த்தலாம் அல்லது நீக்கலாம் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா கிருமித்தொற்று பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கும் நிலையில், மறு பக்கம் மில்லியன் கணக்கான ஊழியர்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் இருதலைக் கொள்ளி நிலையில் அமெரிக்கா உள்ளது.
எனினும், வருமான இழப்பு இருந்தபோதும் அனுமதிக்கப்பட்ட வர்த்தக உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் வர்த்தகங்களை மீண்டும் தொடங்கவில்லை என்று கூறுகிறது ராய்ட்டர்ஸ் ெசய்தித் தகவல்.
இதன் தொடர்பில் பச்சை குத்தும் நிலையம் ஒன்றை நடத்தும் ஷே கேனன் என்பவர், மே மாதம் மட்டுமே தனது சேவையை மீண்டும் தொடங்கப் போவதாகவும் அதுவும் முன்பதிவு முறையிலேயே தொடங்கப்போவதாகவும் கூறுகிறார். வழக்கமான சேவையை ஜூன் மாதம் அல்லது அதற்குப் பிந்திய காலத்தில்தான் தமது நிலைய சேவையைத் தான் தொடங்கப்போவதாகவும் கூறுகிறார்.
"கிருமித்தொற்று, மரண எண்ணிக்கையை கவனித்து எது சரியென்று எங்களுக்குத் ேதான்றுகிறதோ அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம்," என்று இவர் விளக்குகிறார்.
அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,000, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 875,000 என்று தற்பொழுது உள்ளதாகக் கூறப்படுகிறது.
"எங்கள் நிலையம் அனைவருக்கும் கிருமித்தொற்று உள்ளது என்ற அடிப்படையில் இயங்கத் தொடங்கும். அதன்படி அனைவரும் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று மற்றொரு வர்த்தகரான மாஸ்கல் என்பவர் கூறுகிறார்.
இதற்கிடையே, ஒக்லஹோமா மாநிலமும் நேற்று சில வகையான வர்த்தகங்களை மீண்டும் இயங்க அனுமதித்துள்ளது. மற்றொரு மாநிலமான ஃபுளோரிடா தனது கடற்கரையின் சில பகுதிகளை பொதுமக்களுக்காக நேற்று திறந்துவிட்டுள்ளது.

