இலங்கையில் மே 4 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கையில் மே 4 வரை ஊரடங்கு நீட்டிப்பு

1 mins read
cef35fad-5b97-4391-9538-a47d281cab84
கொரோனா கிருமித்தொற்று அதிகரித்திருப்பதால் மேலும் ஒருவாரத்துக்கு அதாவது மே மாதம் 4ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

ஊரடங்கை நாளை முதல் தளர்த்தும் முடிவை இலங்கை மாற்றியுள்ளது. அங்கு கப்பல் தளம் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்திருப்பதால் மேலும் ஒருவாரத்துக்கு அதாவது மே மாதம் 4ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு, நாளை முதல் தளர்த்தப்பட இருப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே அந்த அறிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டு, ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்த அறிக்கை வெளியானது.

மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்புவில் 81 பேருக்கு கிருமித்தொற்று பதிவாகியுள்ளது.

கப்பல் பணியாளர்களிடையேயும் கிருமித்தொற்று அதிகரித்துள்ளது. வெளிசாரா கப்பல் தளத்தில் அந்த எண்னிக்கை 65ஆக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொழும்பு புறநகர் பகுதியான வெளிசாராவில் வசிக்கும் சுமார் 4,000 கப்பல் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தால் கடந்த வாரம் தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு 30 பேருக்கு கிருமித்தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நேற்று இரவு அந்த முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். ஆனால், அவர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், அவரது உடல், தனிமைப்படுத்தப்படுவோருக்கான விதிமுறைகளின்படி உடனடியாக தகனம் செய்யப்பட்டது.

இலங்கையில் இதுவரை 460 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு எழுவர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்