நியூயார்க் மருந்துக் கடைகளில் கிருமித் தொற்று பரிசோதனை

நியூயார்க் மருந்துக் கடைகளில் கிருமித் தொற்று பரிசோதனை

2 mins read
80abfa42-38ac-4650-8350-4c340f692edf
கொரோனா கிருமிப் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கடற்கரைகள் மூடப்படவில்லை. நேற்று நியூபோர்ட் கடற்கரைக்கு வந்த கலிபோர்னியாவின் ஆரஞ்சு வட்டார மக்கள் காலாற நடந்து குளித்து, வெயிலில் காய்ந்து பொழுதைப் போக்கினர். படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவில் நோய்ப் பரவலின் மையமாக விளங்கும் நியூயார்க் நகர மருந்துக் கடைகளில் கொரோனா கிருமித் தொற்று சோதனை நடத்த அனுமதிக்கப்படவிருக்கிறது.நியூயார்க் மாநில ஆளுநர் இதனை தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு கிருமித் தொற்று சோதனை நடத்துவது இலக்கு. இதற்காக 5,000 மருந்துக் கடைகளில் பரிசோதனை நடத்த அனுமதிக்கப்படும் என்று ஆளுநர் ஆண்ட்ரு குவோமோ கூறினார்.

அமெரிக்கா முழுவதும் 938,000 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 53,751 பேர் கிருமிக்கு பலியாகிவிட்டனர். இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் கொரோனா கிருமி நிலவரத்தை விளக்கும் அன்றாட செய்தியாளர் கூட்டத்துக்கு அதிபர் டிரம்ப் வரவில்லை. பின்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஊடகங்கள் தேவையற்ற கேள்விகளை கேட்பதாக அவர் சாடினார்.

கடந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கொரோனா கிருமி நோயை குணப்படுத்த கிருமி நாசினியைப் பயன்படுத்தலாம் என்று அதிபர் டிரம்ப் யோசனை கூறியிருந்ததால் பெரும் சர்ச்சை வெடித்தது.

ஊடகங்கள் அவரை கடுமையாக விமர்சித்தன. திரு டிரம்பின் யோசனைக்கு கண்டனம் தெரிவித்த மருத்துவர்களும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், கிருமி நாசினி விஷத்தன்மை உள்ளதால் கிருமியைக் கொல்வதற்கு முன்பாகவே ஆளை கொன்றுவிடும் என்று எச்சரித்திருந்தன.

நியூயார்க்கில் கடந்த 18 மணி நேரத்தில் வீட்டில் பயன்படுத்தப்படும் ரசாயனத் திரவங்களை குடித்துவிட்டதாக உதவி கேட்டு 30 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

இது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 13 சம்பவங்கள் அதிகம். இதற்கும் அதிபர் டிரம்ப் தெரிவித்த யோசனைக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவில்லை.

இதற்கிடையே அமெரிக்காவின் நான்கு மாநிலங்களில் உள்ள சிறைகளில் ஏறக்குறைய 3,300 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 96 விழுக்காட்டினருக்கு கிருமி தொற்றியதற்கான அறிகுறியே இல்லை.

ஒஹாயோ சிறையில் முதல் கிருமித் தொற்று கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் இயக்குநர், கண்ணுக்குத் தெரியாத பேயை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது என்று கூறினார்.

"எங்கிருந்து கிருமி தொற்றுகிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை," என்று ஒஹாயோ மாநில மறுவாழ்வு பிரிவின் இயக்குநரான ஆன்னட் சாம்பர்ஸ் ஸ்மித் குறிப்பிட்டார்.

ஒஹாயோவில் உள்ள மரியோன் சீர்திருத்த நிலையத்தில் 2,500 கைதிகள் வசிக்கின்றனர். பெரும்பாலோர் முதியவர்கள். ஏற்கெனவே பலருக்கு சுகாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றன.

இந்த நிலையில் முதல் கிருமித் தொற்று சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2,300 பேருக்கும் கிருமி சோதனை நடைபெற்றது. இதில் 2,028 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 98 விழுக்காட்டினருக்கு அறிகுறியே இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்