கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முழுவதும் புதிதாக எந்த ஒரு மாவட்டமும் மோசமாகப் பாதிப்படையவில்லை. அதேபோல் நோய்த்தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
மலேசியாவில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிலாங்கூரின் செலயாங் பாரு பகுதியில் புதிய மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
இதுவரையிலும் கிருமித் தொற்றால் பாதிப்படையாத மாவட்டங்கள் அல்லது கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு முற்றிலும் குணமடைந்தவர்களின் மாவட்டங்களும் கிருமித் தொற்று இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 18ஆம் தேதி முதல் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்படும் மாவட்டங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிப்பது மலேசிய சுகாதார அமைச்சின் அறிக்கை மூலம் தெரியவருகிறது.
மலேசியாவில் ஜனவரி 25ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஜோகூர் வந்திறங்கிய மூன்று சீன நாட்டவர்களுக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதனையடுத்து பிப்ரவரி 16ஆம் தேதி கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 22ஆனது. பத்து நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். புதிய தொற்றுச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்ததைத் தொடர்ந்து மலேசியாவில் மார்ச் 18 முதல் மார்ச் 31ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது மே 12 வரை நீட்டிக்கப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி மலேசியாவின் கோலாலம்பூரில் 274 பேர்; குச்சிங், சரவாக்கில் 94 பேர்; ஹுலு லங்காட், சிலாங்கூரில் 100 பேர், சிரம்பான், நெகிரி செம்பிலானில் 95 பேர்; ஜோகூரின் குளுவாங்கில் 85 பேர்; ஜோகூர் பாருவில் 80 பேர்; கோலாலம்பூரின் கெப்போங்கில் 73 பேர்; பாகாங்கின் குவாந்தானில் 66 பேர்; சரவாக்கின் கோத்தா சமராகனில் 65 பேர்; சிலாங்கூரின் பெட்டாலிங்கில் 63 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் நேற்று புதிதாக 38 பேருக்கு கிருமி தொற்றியதாகவும் 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 5,780 பேரை கிருமித் தொற்று பீடித்தது. அவர்களில் 3,862 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 98 மரணங்கள் ஏற்பட்டன என்று அந்நாட்டு சுகாதாரத்துறை நேற்று அறிவித்தது.
1,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 15 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் செய்தியாளர் கூட்டத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் நூல் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சுகாதாரத்துறை ஊழியர்கள் 325 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 185 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர். 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவர் சிகிச்சை பலனின்றி மாண்டனர்.

