ஷங்காய்: உலகையே உருக்குலைத்து, விடாமல் பிடித்து பேயாட்டம் ஆடும் கொரோனோ கிருமித்தொற்றின் தொடக்க இடமாகக் கூறப்படும் சீனாவின் வூஹான் நகரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர் என்று அந்நாடு அறிவித்துள்ளது. புதிய கொரோனா கிருமி முதன்முதலில் வூஹானில் உள்ள ஓர் ஈரச்சந்தையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவானது என்று நம்பப்படுகிறது. அது வெகுவிரைவில் உலகம் முழுவதும் பரவி ஏறக்குறைய 2.83 மில்லியன் பேருக்குத் தொற்றியது.
இதுவரையிலும் 1,97,872 பேரின் உயிர்களைக் குடித்துள்ளது. வூஹானில் கொரோனா கிருமி துடைத்தொழிக்கப்பட்டது குறித்து பேசிய சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் பேச்சாளர் மி ஃபெங், நாடு முழுதும் உள்ள சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். சீனாவில் ஏற்பட்ட கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்புச் சம்பவங்களில் 56 விழுக்காடு வூஹானில் ஏற்பட்டது. கொரோனா கிருமி இங்கு மட்டும் 3,869 பேரின் உயிரைக் குடித்துள்ளது.

