வாஷிங்டன்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பற்றி பல்வேறு வதந்திகள் வலம் வரும் வேளையில் அவர் தமக்குச் சொந்தமான உல்லாசத் தளத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவருக்குச் சொந்தமான சிறப்பு ரயில் அவர் ஓய்வெடுக்கும் உல்லாசத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை துணைக் கோளப் படங்கள் காட்டு கின்றன. திரு கிம்முக்கு மோசமான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது இருப்பிடம் பற்றி தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரியாவின் நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவ குழு ஒன்றை வடகொரியாவுக்கு சீனா அனுப்பி யுள்ளது. சனிக்கிழமை வொன்சானில் உள்ள வடகொரியத் தலைவருக்கான நிலையத்தில் ரயில் தென்பட்டது என்று வடகொரியாவை கண்காணிக்கும் '38 நார்த்' தெரிவித்தது. இந்த நிலையத்தை கிம்மின் குடும்பத்தினர் மட்டுமே பயன் படுத்த முடியும். ஆனால் ரயில் நிற்பதால் கிம் அங்கு இருப்பார் என்பதற்கான உத்தரவாதம் இல்லை என்று '38 நார்த்' அறிக்கை குறிப்பிட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி நடை பெறும் வடகொரியாவை நிறுவிய தனது தாத்தா கிம் இல் சங்கின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கிம் ஜோங் உன் பங்கேற்பது வழக்கம். ஆனால் இம்முறை அவர் பங்கேற்காதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

