வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் உடல்நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அவர் உயிருடனும் நல்ல உடல்நலத்துடனும் இருப்பதாகவும் வழக்கத்திற்கு மாறாக எவ்வித நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்றும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15ஆம் தேதி திரு கிம்மின் தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதில் தவறாமல் கலந்துகொள்ளும் திரு கிம், இவ்வாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், தென்கொரிய தலைநகர் சோலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'சிஎன்என்' செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த சந்தித்த தென்கொரிய அதிபரின் பாதுகாப்பு ஆலோசகரான திரு மூன் சுங் இன், "வடகொரியா உடனான எங்களது நல்லுறவு தொடர்கிறது. எங்களது உளவுத்துறை அளித்துள்ள தகவலின்படி, வடகொரியாவில் எவ்வித அசாத்திய நிகழ்வுகளும் நடைபெறவில்லை," என்று தெளிவுபடுத்தினார்.
திரு கிம் விரைவில் நாட்டு மக்களிடம் எப்போது உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழந்துள்ளது.

