சிகாகோ: அமெரிக்காவில் மேலும் சில மாநிலங்கள் கொரோனா கிருமித்தொற்று கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகி வருகின்றன.
அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் அதிகரித்து வரும் நிலையில், பல பொது சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒருமாத முடக்க நிலையையடுத்து, ஜார்ஜியா, ஒக்லஹோமா, அலாஸ்கா மற்றும் தெற்கு கெரோலினா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே தங்கள் பொருளாதாரங்களை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த மாநிலங்களோடு இணைந்து, கொலராடோ, மிசிசிப்பி, மினசோட்டா, மொன்டானா மற்றும் டென்னிசி ஆகிய மாநிலங்களும் தற்போது பொருளாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்குத் தயாராகி வருகின்றன.
மனிதத் தொடர்பு அதிகரித்தால் அது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையைத் தூண்டக்கூடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கிருமித்தொற்று மீண்டும் தலையெடுக்காமல் இருக்க வேண்டுமானால், விரிவுபடுத்தப்பட்ட பரிசோதனைகள் மற்றும் தொடர்பு தடமறிதலுக்கான கட்டமைப்பு தேவை என்கின்றனர் அவர்கள்.
வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 16 விழுக்காடு அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும்.
"அடுத்த இரண்டு மாதங்கள் மோசமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
இதற்கிடையே, கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நியூயார்க்கில் வரும் 15ஆம் தேதி முதல் படிப்படியாக பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும் என்று அறிவித்துள்ளார் அதன் ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ.
முதலில் கட்டுமானப் பணிகள் மற்றும் உற்பத்தித் துறைகள் மீண்டும் செயல்பட உள்ளன.
அதன் பிறகு, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும் பட்சத்தில், மற்ற வர்த்தகங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், பள்ளிகள் திறக்கப்படும் என்றார் நியூயார்க் மேயர்.
நியூயார்க்கில் மாண்ட 17,000 பேரையும் சேர்த்து அமெரிக்காவில் இதுவரை 54,700 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர், 960,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

