வாஷிங்டன்: சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா கிருமிப் பரவலை தமது நிர்வாகம் தீவிரமாக விசாரித்து வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், "இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.
"சீனா நடந்துகொண்ட விதத்தில் எங்களுக்குத் திருப்தி இல்லை. கிருமி பரவிய விவகாரத்தில் சீனாவை பொறுப்பேற்க வைக்க ஏராளமான வழிகள் உள்ளன.
"கிருமிப் பரவலை அது தொடங்கிய இடத்திலேயே கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்று கருதுகிறோம். அவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தால் இப்போது அது உலகம் முழுவதும் பரவி மக்கள் தவிப்பதைத் தவிர்த்திருக்க முடியும்," என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
கிருமிப் பரவல் விவகாரத்தில் சீனா நடந்துகொண்ட விதம் குறித்து அதிபர் டிரம்ப் ஏற்கெனவே பல முறை அதிருப்தி தெரிவித்துள்ள வேளையில் இப்போது அதில் தீவிரம் காட்டுவதுபோல அவரது அண்மைய கருத்துரைப்பு புலப்படுத்துவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கடந்த வாரம் கூறுகையில், "கிருமிப் பரவலை உரிய நேரத்தில் உலகிற்குத் தெரிவிக்க சீனா தவறிவிட்டதாக அமெரிக்கா பலமாக நம்புகிறது," என்றார்.
மேலும், கிருமி மூலம் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் குறித்து தெரிந்திருந்தும் அதனை சீனா மூடிமறைத்துவிட்டதாகவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
ஆனால், சீனாவின் தரப்பில் அவருக்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மைக் போம்பியோ அரசியல் விளையாட்டை நிறுத்திவிட்டு உயிர்களைக் காப்பதில் கவனம் செலுத்தட்டும் என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யிங் நேற்று முன்தினம் கூறினார்.
கொரோனா கிருமி கடந்த ஆண்டு இறுதிவாக்கில் சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கியது. தற்போது உலக அளவில் மூன்று மில்லியன் மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

