கொரோனா கிருமியிலிருந்து தப்ப இந்தோனீசியாவில் சூரியக் குளியல் ; பலனளிக்குமா?

சூரிய ஒளியில் இருந்தால் கொரோனா கிருமி பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம் என்ற அதீத நம்பிக்கையுடன் இந்தோனீசியாவில் திறந்த வெளிகளில் சூரியக் குளியலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

சூரிய ஒளி படும்படி  இருந்தால், கொரோனா கிருமிப் பரவல் மெதுவடையும் அல்லது கிருமி அழிந்துவிடும் என்பது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பி பாலியில் பலர் சூரியக் குளியலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் சூரிய ஒளியால் கொரோனா கிருமி விரைந்து அழிவதாக ஆய்வு ஒன்றை மேற்கோள் காட்டி தெரிவித்தார். அந்த ஆய்வு இன்னும் முழுமையடையவில்லை என்றாலும் அதன் தொடர்பில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

சூரிய ஒளி படும்படி இருப்பது உடலுக்கு வைட்டமின் ‘டி’ சத்து கிடைக்க உதவும்; ஆனால் அதற்கும் கிருமிப் பரவலுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்று ஜகார்த்தாவில் உள்ள OMNI Pulomas மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் டிர்கா சக்தி ராம்பி கூறினார்.

வைட்டமின் 'டி' சத்து உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தாலும், சூரியக் குளியல் கொவிட்-19க்கு காரணமான கிருமியைக் கொல்லாது என்று அவர் மேலும் விளக்கி உள்ளார்.

கொரோனாவிடமிருந்து தப்புவதற்காக தொடர்ந்து சூரிய ஒளியில் இருந்தால் தோல் புற்றுநோய் போன்ற வேறு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் அதற்கேற்ப முன்னெச்சரிகை நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.