பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் நான்காம் கட்டம் நேற்று தொடங்கிய நிலையில், அங்கு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்லமுடியும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, ஒரு குடும்பத்திலிருந்து இருவர் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரே வீட்டில் தங்கியிருப்பவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.
அதே போல் வீட்டில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் தான் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டு
உள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
இதற்கிடையே, பொருளியல் நடவடிக்கைகள் முழுவீச்சில் தொடங்கிய 2 அல்லது 4 வாரங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது. பல தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பாலர் பராமரிப்பு மையங்கள் திறக்கப்படுவதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து இன்று பரிசீலிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
மலேசியாவில் நேற்று மேலும் 94 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 72 பேர் இந்தோனீசியாவில் இருந்து திரும்பியவர்கள்.

