சிட்னி: கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து ஆஸ்திரேலியா அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
முதல் கட்டமாக உள்நாட்டு பயணத்துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் 80 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள உள்நாட்டுப் பயணத்துறை புதிய வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் எல்லைகளைத் திறந்து விடுவதில் மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பல நாட்களாக புதிய கொரோனா கிருமித் தொற்றுச் சம்பவங்கள் குறைந்து வருகின்றன.
இதையடுத்து மூன்று அடுக்கு திட்டத்தின் கீழ் சமூக இடைவெளி விதிமுறை ஜூலையில் விலக்கப் பட வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரும்புகிறார்.
இருந்தாலும் நாடு முழுவதும் கட்டுப்பாடற்ற நடமாட்டத்தை அனுமதிக்கும் இந்தத் திட்டத்திற்கு மாநிலத் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பது தெரிய வில்லை.
மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், வீழ்ச்சியடைந்துள்ள பொருளியலை தூக்கி நிறுத்த மாநிலங்களுக்கு இடையே எல்லைகள் போக்கு வரத்துக்கு திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இவ்வேளையில் குயின்ஸ்லாந்து மாநிலம் எல்லைகளை மூடியே வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
"ஒரு தொற்றுச் சம்பவமே பெரும் பிரச்சினைக்கு வழி வகுத்து விடும்," என்றும் அது எச்சரித்து உள்ளது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 7,000 பேர் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நூறு பேர் இறந்துவிட்டனர்.

