பெய்ஜிங்: கடந்த 1988ஆம் ஆண்டில் இரண்டு வயது மாவோ-யின் ஹோட்டலுக்கு வெளியே இருந்த போது கடத்தப்பட்டார்.
அவரைக் கடத்திய சீன ஆடவர் ஒருவர், சிச்சுவானில் குழந்தைகள் இல்லாத பெற்றோருக்கு விற்று விட்டார்.
இதனை அறியாத பெற்றோர் அவனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதற்கிடையே போலிசார் முக அடையாளத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவனது தற்போதைய முகத்தை ஊகித்து தேசிய தரவுகளில் தேடினர்.
இந்த நிலையில் 1980ல் சிச்சுவானில் குழந்தையை வாங்கிய ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை மகனை முதல் முறையாக சந்தித்த பெற்றோர் கதறி அழுதனர். தொலைக்காட்சி பேட்டியில் பேசிய தாயார் லி ஜிங்ஷி, தனது வேலையைக் கைவிட்டு 100,000 துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு பல தொலைக்காட்சி ஒளிவழிகளில் தோன்றி மகனை தேடியதாகக் கூறினார்.
போலிசார் மரபணு சோதனை மூலம் காணாமல் போனவர் மாவோதான் என்பதை உறுதி செய்தனர். மாவோ தாம் கடத்தப் பட்டதுகூட தெரியாமல் தத்தெடுத்த பெற்றோரிடம் வளர்ந்துவந்தார்.
போலிசார் ஏற்பாடு செய்த பெற்றோருடன் மகனை இணைத்து வைக்கும் நிகழ்ச்சியில் பக்கவாட்டு கதவு வழியாக வெளியே வந்த மாவோ தாயின் கையில் சாய்ந்தார்.
அப்போது, "நான் இனி என் மகனை பிரிய மாட்டேன், இனிமேல் அவனை விடமாட்டேன்," என்று கூறி மகனின் கையை லி ஜிங்ஷி இறுகப் பற்றிக் கொண்டார்.
மாவோவும் பெற்ற தாயுடன் இனி தங்க முடிவு செய்துள்ளார்.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்பது பற்றி முறையான தகவல் இல்லை.
ஆனால் கடத்தப்பட்ட 6,300க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோருடன் போலிசார் இணைத்து வைத்துள்ளனர்.

