$11 அன்பளிப்பைப் பெற கூடிய கூட்டம்; நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு

 இலங்கையின் தலைநகர் கொழும்புவில் தொழிலதிபர் ஒருவர் ஆண்டுதோறும் வழங்கும் $11 (இலங்கை நாணய மதிப்பில் ரூ.1,500)  அன்பளிப்பைப் பெறுவதற்காகக் காத்திருந்த 1,000 பேருக்கிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

கொரோனா கிருமித்தொற்று காலகட்டத்தில் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்கவே திண்டாடுகின்றனர் இலங்கைவாசிகள் பலர்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு உள்ளூர தொழிலதிபர் ஒருவர் ஆண்டுதோறும் அன்பளிப்பு வழங்குவது வழக்கம் என்று அந்தப் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

அதனை எதிர்பார்த்து நேற்று (மே 21) சுமார் 1,000 பேர் சேமிப்புக்கிடங்கு ஒன்றின் முன்பு வரிசையில் காத்திருந்தனர்.

சேமிப்புக்கிடங்கின் கதவு திறந்ததும் உள்ளே நுழைய பலரும் முண்டியடித்ததில் முன்னால் நின்றிருந்த சில பெண்கள் கீழே விழுந்தனர்.

அவர்களைப் பொருட்படுத்தாமல், அவர்கள் மீதேறி பலரும் முன்னேறிச் சென்றதில் மிதிபட்டு மூன்று பெண்கள் இறந்ததாகக் கூறப்பட்டது.

இரண்டு மாத காலமாக பலரும் வேலைக்குச் செல்ல இயலாததால் மக்களிடையே பணத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என்றார் திரு ரஹ்மான்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாத அந்த தொழில்திபரும் அவரது ஐந்து உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர். ஊரடங்கு விதிமீறலுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் சுமார் 5.14 மில்லியன் குடும்பங்களுக்கு  இந்த மாதம் ரூ.5,000ஐ அரசாங்கம் வழங்குவதாகக் கூறப்பட்டது.

கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில், சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இலங்கையில் இதுவரை 1,045 பேருக்கு கிருமித்தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது; 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online