பிரிட்டனுக்குள் நுழைவோருக்கு புதிய கட்டுப்பாடு

லண்டன்: பிரிட்டனுக்கு வருபவர்கள் தங்களை தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு ஜூன் 8ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும். பயணிகள் தங்களுடைய தங்குமிட விவரங்களை அரசாங்கத்திடம் தெரிவிப்பது கட்டாய மாகும்.

திடீர் சோதனைகள் நடத்தப் பட்டு விதிமுறையை மீறியவருக்கு ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடு, எல்லைகளுக்கு இடையே கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சி என்று உள்துறை அமைச்சர் பிரிதி பட்டேல் விளக்கினார்.

புதிய கட்டுப்பாட்டிலிருந்து லாரி ஓட்டுநர்கள், பண்ணை ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.

அயர்லாந்திலிருந்து வரு வோருக்கும் விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

ஆனால் நாடு முழுவதும் எல்லைகள் முழுமையாக மூடப்படவில்லை என்று பிரிதி பட்டேல் தெரிவித்தார்.

இதற்கிடையே பயணிகள் யாருக்காவது தங்குமிடம் கிடைப்பதில் பிரச்சினை இருந்தால் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் சொந்த செலவில் தங்கலாம்,” என்று எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் பால் லிங்கன் கூறினார்.