'எதற்கெடுத்தாலும் சீனாவைக் குறைசொல்வது புதிய கெடுபிடிப் போருக்கு வழிவகுக்கும்' - அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

'எதற்கெடுத்தாலும் சீனாவைக் குறைசொல்வது புதிய கெடுபிடிப் போருக்கு வழிவகுக்கும்' - அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

3 mins read
ba244c94-0913-44ed-a159-c0048a324949
அமெரிக்காவில் பரவும் அரசியல் கிருமி காரணமாக அந்த நாட்டின் அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் சீனாவைக் குறைகூறி அதன் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.படம்: ஏஎஃப்பி -

பெய்ஜிங்: அமெரிக்காவில் அரசியல் கிருமி பரவுகிறது என்றும் அது கெடுபிடிப் போருக்கு வழிவகுத்துவிடக்கூடும் என்றும் சீனா எச்சரித்து உள்ளது.

அமெரிக்காவில் பரவும் அரசியல் கிருமி காரணமாக அந்த நாட்டின் அரசியல்வாதிகள் எதற்கெடுத்தாலும் சீனாவைக் குறைகூறி அதன் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

அமெரிக்காவின் அரசியல் வாதிகளில் சிலர் பெரும்பாலான அடிப்படை நிலவரங்களை அலட்சியப்படுத்திவிட்டு, அளவுக்கு அதிகமான பொய்களை அவிழ்த்துவிட்டு, சீனாவுக்கு எதிராக ஏராளமான சதித்திட்டங்களைத் தீட்டுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் சில அரசியல் சக்திகள், சீனாவுடன் கூடிய உறவைப் புதிய கெடுபிடிப் போருக்குக் கொண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை, பல ஆண்டு காலமாக இடம்பெற்று வந்த ஒத்துழைப்பைக் கெடுத்துவிடும் என்று தெரிவித்த வெளியுறவு அமைச்சர், அமெரிக்காவும் சீனாவும் சகோதரத்துவ சகவாழ்வுக்கு வழிகாண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சீனாவின் அரசாங்க கவுன்சிலருமான வாங், பெய்ஜிங்கில் நடந்த வருடாந்திர அரசமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அதனையொட்டி நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

உலகின் இரு பெரும் வல்லரசுகளாகத் திகழும் அமெரிக்கா, சீனா இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட உறவுகளே பெய்ஜிங் கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

கொரோனா கிருமித்தொற்று, ஹாங்காங்கின் நிலை ஆகியவையும் இதர பல பிரச்சினைகளும் இந்த இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி வருகின்றன.

கொவிட்-19 கிருமியை வூஹான் கிருமி என்றும் சீனக் கிருமி என்றும் சொல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இதர அமெரிக்க அதிகாரிகளும் சீனாவுக்கு எதிராக கடுமையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

கொரோனா கிருமி சீனாவின் வூஹானில் இருக்கும் ஒரு சோதனைச் சாலையில் இருந்து வெளியாகி இருக்கிறது என்று தெரிவித்து வரும் அமெரிக்கா, அந்தக் கிருமிகளைக் கட்டுப்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சிகளைக் கடுமையாகக் குறை கூறி வருகிறது.

கொவிட்-19 கிருமி எப்படி தோன்றியது என்பதைக் கண்டுபிடிக்க விசாரணை நடக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரி வருகிறது. இந்த நிலையில், பொருளியல் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிர மடையும் சீனாவில் தேசிய உணர்வு மேலோங்கி வருகிறது.

சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளராக இப்போது நியமிக்கப்பட்டு இருக்கும் லிஜியன் உட்பட அந்த நாட்டின் பல அரச தந்திரிகளும் மேற்கத்திய குறைகூறலுக்கு எதிராக 'நரிதந்திர' உத்தியைக் கையில் எடுத்து இருக்கிறார்கள்.

என்றாலும் அவர்களின் இந்த அணுகுமுறையைச் சீனாவுக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் குறைகூறி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஓர் அணுகுமுறை அமெரிக்காவுடனான உறவை மேலும் பாதித்துவிடும் என்றும் உலகளவில் சீனாவின் பெயர் கெட்டுவிடும் என்றும் அந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்த, ஒத்துழைப்புமிக்க நிலையான உறவைக் கட்டிக்காக்கவே சீனா விரும்புவதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.

சீனாவையோ அதன் நவீனமய முயற்சிகளையோ அமெரிக்காவால் தடுக்க முடியாது என்றும் வெளியுறவு அமைச்சர் வாங் தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கெனவே வர்த்தகப் போர் மூண்டுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் போட்டி போட்டுக்கொண்டு இறக்குமதிகளுக்கு வரி விதித்து வருகின்றன.