ஹாங்காங்கில் புதிய சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: சாலை அடைப்பு; கண்ணீர்ப் புகையடித்து கலைப்பு

ஹாங்காங்கில் புதிய சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: சாலை அடைப்பு; கண்ணீர்ப் புகையடித்து கலைப்பு

2 mins read
a33c3664-6d69-49dd-97c3-919eec0ec310
ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் ஒருவரை கலகத் தடுப்பு போலிசார் மடக்கி, அடக்கி, ஒடுக்குகிறார்கள். படம்: இபிஏ -

ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று ஜனநாயக ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். அங்கு சோகோ என்ற பகுதியில் ஆயிரக்கணக்கானோர் கூடியதாக சில ஊடகங்கள் தெரிவித்தன. அங்கிருந்து அவர்கள் அணி

வகுப்பைத் தொடங்க இருந்தனர்.

என்றாலும் கடுமையான போலிஸ் காவல் போடப்பட்டு இருந்தது. எட்டு பேருக்கு மேல் கூட்டம் போடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்தத் தடையை மீறி செயல்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சில இடங்களில் சாலைகளை அடைத்து பிரச்சினைகளைக் கிளப்பி போக்குவரத்துக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்திவிட்டதால் போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைக்க வேண்டி இருந்தது என்று போலிஸ் அறிக்கை ஒன்றில் கூறியது.

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டங்களை நேரடியாக அமல்படுத்த சீனா திட்டமிட்டு இருக்கிறது. அந்தத் திட்டம் பெரும் சர்சையைக் கிளப்பி உள்ளது.

அந்தத் திட்டம் நிதிச் சந்தைகளில் பெரும் பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அனைத்துலக அளவில் 200 அரசியல் பிரமுகர்கள், அனைத்துலக மனித உரிமை அமைப்புகள், சில வர்த்தக அமைப்புகள் எல்லாம் சீனாவின் புதிய சட்டத்தைக் குறைகூறி உள்ளன.

புதிய சட்டம் நடப்புக்கு வந்தால் ஹாங்காங்கில் சீன அரசாங்கத்தின் வேவுத்துறை அமைப்புகள் நிலை கொள்வதற்கு வழி ஏற்படுத்தப்படும்.

ஹாங்காங் சட்டமன்றத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர சீனா திட்டமிடுகிறது. ஹாங்காங் 1997ல் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. அது முதல் 'ஒரு நாடு இரண்டு ஆட்சிமுறை' என்ற ஏற்பாட்டின் படி ஹாங்காங்கில் ஆட்சி நடக்கிறது.

ஆனால் சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் இந்த ஏற்பாட்டைக் கெடுத்துவிடும் என்று கவலை கிளம்பி இருக்கிறது.