அமெரிக்கா மீண்டும் சீனாவுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன்: ஹாங்காங்கிற்கு புதிய, கடுமையான பாதுகாப்புச் சட்டம் ஒன்றை இயற்ற சீனா தயாராகி வருகிறது.

இதற்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்பில் கருத்துரைத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் ராபர்ட் ஓ பிரயன், அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுமானால், ஹாங்காங்கிற்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை அமெரிக்கா ரத்து செய்யும் என்று எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்ற நிலை, இரு நாடுகளையும் புதியதொரு பனிப்போருக்கு இட்டுச் செல்லும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறினார்.

அவரின் இந்தக் கூற்றுக்கு சில மணிநேரம் கழித்து ராபர்ட் பிரயன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கை பிரிட்டனிடம் இருந்து சீனாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அவ்விரு நாடுகளுக்கும் இடையே 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரயன், சீனா அந்த ஒப்பந்தத்தை மீறுவதுபோல் தெரிகிறது என்று கூறினார்.

“சீனா ஹாங்காங் தொடர்பான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறை வேற்றினால், அது இனியும் தொடர்ந்து ஆசிய நிதி மையமாக விளங்க முடியாது.

“அதனால் ஹாங்காங்கிற்கு பேரிழப்பு ஏற்படுவதுடன் சீனா வுக்கும் கெடுதலாக முடியும்,” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ராபர்ட் பிரயன், அமெரிக்க சட்டப்படி ஹாங்காங் தனது சிறப்பு அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு சீனா ஹாங்காங்கின் ஜனநாயக அமைப்புகளை மதித்து நடக்க வேண்டியது அத்தியாவசியம்,” என்று சொன்னார்.

முன்னதாக பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, ஹாங்காங் தொடர்பான சட்டத்திற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்குமானால் அது ஹாங்காங் பெருமளவில் சுயாட்சித் தன்மையுடன் செயல்படும் என சீனா அளித்த வாக்குறுதிக்கு சாவு மணி அடிப்பதற்கு சமம் என கருத்துக் கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவில் ஹாங்காங் தொடர்பாக சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, ஹாங்காங்கிற்கு வர்த்தகச் சலுகைகள் நீடிப்பதற்கு அங்கு சுயாட்சி நிலவுவதை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லையெனில், அது தனது வர்த்தகச் சலுகைகளை இழக்க நேரிடும்.

ஹாங்காங்கிற்காக இயற்றப்படும் புதிய சட்டம், தேசத் துரோகம், கீழறுப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு என்று வர்ணிக்கப்படும் செயல்களைத் தண்டிக்க அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

இது அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்க வழிவகுக்கும் என செய்தித் தகவல்கள் கூறு கின்றன.

இதற்கிடையே ஹாங்காங்கின் பாதுகாப்பு ஆலோசகர், ஹாங் காங்கில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ‘ஹாங்காங் சுதந்திரம்’ போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வரு வதாக பாதுகாப்புக்கான செயலர் ஜான் லீ நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“சில மாதங்களிலேயே அமைதி யான ஹாங்காங், வன்முறைகள் நிறைந்த நகரமாக மாறிவிட்டது,” என்றும் அவர் மேலும் தெரிவித் தார்.