ஷாங்காயில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் இரவு கேளிக்கை விடுதிகளில் உற்சாகம், தள்ளாட்டம்

2 mins read
964e826d-f7c2-44ac-b09d-4d447176cd73
கேளிக்கை விடுதியில் ஊழியர்களும் வாடிக்கை யாளர்களும் முகக்கவசங் களை அணிந்து உள்ளனர்.படம்: ராய்ட்டர்ஸ் -

ஷாங்காய்: கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதால் சீனாவில் உள்ள இரவு கேளிக்கை விடுதிகள் உயிர்ப்பெற்று எழுந்துள்ளன.

ஏராளமானோர் தள்ளாட்டத்தில் பங்கேற்று உற்சாகத்தில் மிதக்கின்றனர். இருந்தாலும் கிருமி நாசினியும் முகக் கவசங்களும் தள்ளாட்டத்தின் ஒரு பகுதியாக புதிய அனுபவமாக மாறிவிட்டது என்று மதுபானப் பிரியர்கள் கூறியுள்ளனர்.

வார இறுதியில் ஷாங்காய் வர்த்தக வட்டாரத்தில் உள்ள '44KW' எனும் கேளிக்கை விடுதி இருட்டில் ஒளிரும் மின்விளக்குகளின் வெளிச்சத்தில் பலர் மதுபானங்களை குடித்தும் ஆடியும் மகிழ்ந்தனர். பாதுகாப்பு இடைெவளி அவர்களுக்கு இடையே குறைந்து காணப்பட்டது.

ஆறு வாரங்களுக்குப் பிறகு '44KW' கேளிக்கை விடுதி மார்ச் மத்தியில் திறக்கப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்கள் யாரும் வரவில்லை. தற்போது கொவிட்-19 பரவல் கட்டுக்குள் இருப்பதால் கேளிக்கை விடுதிகளில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

"கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக பல வாடிக்கையாளர்கள் இங்கு வர தயக்கம் காட்டினர்," என்று '44KW' கேளிக்கை விடுதியின் நிறுவனரான சார்ல்ஸ் குவோ குறிப்பிட்டார்.

இம்மாதத்தில்தான் கடந்த ஆண்டைப் போல வியாபாரம் களைகட்டியிருக்கிறது என்றும் அவர் சொன்னார்.

கேளிக்கை விடுதியில் நுழைவதற்கு முன்பு ஒவ்வொரு வாடிக்கையாளரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. அவர்களுடைய முழு விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

கேளிக்கை விடுதியில் உள்ள ஊழியர்கள் அனைவரும் எல்லா சமயங்களிலும் கையுறைகளையும் முகக்கவசங்களையும் அணிந்துள்ளனர். கண்ணாடி குவளைக்குப் பதிலாக பிளாஸ்டிக் குவளைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கேளிக்கை விடுதி முழுவதும் கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு முறை கதவு கைப்பிடிகளும் கழிவறைகளும் கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்யப்படு கின்றன.