ஒரே நாளில் அமெரிக்காவைவிட பிரேசிலில் அதிகமானோர் கிருமித்தொற்றால் உயிரிழப்பு

சாவ் பாவ்லோ: பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா கிருமித்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக அமெரிக்காவைவிட அதிகமாக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 807 மரணங்கள் பதிவாகின. அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 620 ஆக இருந்தது.

அமெரிக்காவை அடுத்து கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு பிரேசில். அமெரிக்காவில் 1.637 மில்லியன் பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 374,898 பேரை கிருமி தொற்றியுள்ளது.

அமெரிக்காவில் கிருமித்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,971 ஆக உள்ளது. பிரேசிலில் அந்த எண்ணிக்கை 23,473.

பிரேசிலில் கிருமித்தொற்று நிலவரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்வதற்குப் பயணக் கட்டுப்பாடுகளை வெள்ளை மாளிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது. பயணக் கட்டுப்பாடுகள் நாளை நடப்புக்கு வரும் என்று வெள்ளை மாளிகை கூறியிருந்த நிலையில், அமெரிக்க நேரப்படி நேற்று இரவு 11.59 மணிக்கு அது நடப்பு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான காரணத்தை வெள்ளை மாளிகையின் அறிக்கை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, மலேரியா தடுப்பு மருந்தான ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயினை’ கொண்டு கொரோனா கிருமித்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என பிரேசிலின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

அந்த மருந்தின் பயன்பாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் அக்கறை தெரிவித்தும்கூட பிரேசில் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை போலவே, கொரோனா கிருமித்தொற்றைக் குணப்படுத்துவதில் ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்துக்கு மருத்துவப் பலன் இருப்பதாக பிரேசில் அதிபர் ஜேர் பொல்சொனாரோ கூறியுள்ளார்.