‘தேசிய பாதுகாப்புச் சட்டம் மக்களின் உரிமை, சுதந்திரத்தைப் பாதிக்காது’

ஹாங்காங்: சீனா முன்மொழிந்துள்ள புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஹாங்காங் மக்களின் உரிமைகள், சுதந்திரத்தைப் பாதிக்காது என்று ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் கூறியிருக்கிறார்.

பரிந்துரைக்கப்பட்ட புதிய சட்டத்தின் தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகும் வரை அமைதி காக்கும்படி அவர் ஹாங்காங் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

புதிய சட்டம் தொடர்பான ஆக அண்மைய விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் முயற்சிகளைத் தமது அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று திருவாட்டி லாம் நேற்று உறுதியளித்தார்.

“முன்மொழியப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டம், விதிமுறைகளை மீறும் ஒரு சிலரை மட்டும் இலக்காக கொண்டுள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பெரும்பாலான மக்களை இது பாதுகாக்கிறது,” என்று அவர் விளக்கினார்.

ஹாங்காங் மக்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள இந்த தேசிய பாதுகாப்புச் சட்டம் பற்றி சீனா கடந்த வாரம் அறிவித்திருந்தது. பிரிவினைவாதம், அரசாங்கத்தை எதிர்க்கும் நடவடிக்கைகள், பயங்கரவாதம் ஆகியவை தேசிய பாதுகாப்புக்கு மிரட்டல்கள் என்று புதிய சட்டம் வரையறுக்கிறது. இதனைக் காரணங்காட்டி சீன உளவுத்துறை ஹாங்காங்கில் தளம் அமைக்க முற்படும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.