இலங்கை தமிழ் அமைச்சர் திடீர் மறைவு

கொழும்பு: இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் தோட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் (படம்) நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 55.

செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் இந்திய தூதருடனும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடனும் சந்திப்பு நடத்திய அவருக்கு மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் தமிழக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். நீண்ட காலத்துக்கு முன்பு இலங்கை மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.