பிள்ளைகளை பாதிக்கும் அரிய நோய் ஆசியாவில் கண்டறியப்பட்டுள்ளது

சோல்: கொரோனா கிரு­மி­யு­டன் தொடர்­பு­டைய பிள்­ளை­க­ளின் உயி­ருக்கு ஆபத்­தான புதிய அரிய வகை நோய்த்­தொற்று  தென்­கொ­ரி­யா­வில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இந்­நோய்­த்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கத்­திற்­கி­ட­மான இரண்டு பிள்­ளை­கள், சிகிச்சை அளிக்­கப்­பட்டு மீண்டு வரு­வ­தாக அந்­நாட்டு சுகா­தார அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

11 வயது சிறு­வன், 4 வயது சிறுமி இரு­வ­ருக்­கும் கொரோனா தொற்று இல்லை என்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தென்­கொ­ரிய அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

பிள்­ளை­க­ளின் நோய் எதிர்ப்பு மண்­ட­லத்­தைச் சிதைக்­கக்­கூ­டிய எம்­ஐ­எஸ்-சி எனப்­படும் குழந்­தை­க­ளைத் தாக்­கும் அழற்சி நோயின் அறி­கு­றி­கள் கவா­சாகி நோய்க்­கான அறி­கு­றியை போன்­றி­ருக்­கும். மேலும் காய்ச்­சல், உட­லில் சிவந்த தடிப்­பு­கள், சுரப்­பி­கள் வீக்­கம் போன்­றவை தென்­படும். மோச­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இதய அழற்சி ஏற்­ப­டக்­கூ­டும்.

கிரு­மித்­தொற்­றால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட பிரான்ஸ், இத்­தாலி, ஸ்பெ­யின், பிரிட்­டன் மற்­றும் அமெ­ரிக்கா ஆகிய நாடு­களில் இந்த மாத தொடக்­கத்­தில் முத­லில் இந்­நோய் பதி­வாகத் தொடங்­கி­யது.

எனவே கொரோனா கிரு­மிக்­கும் இந்­நோய்க்­கும் தொடர்­பி­ருப்­ப­தற்­கான வாய்ப்பு அதி­கம் உள்­ள­தாக அச்­சம் எழுந்­துள்­ளது.

இதற்­கி­டையே, இணைய வர்த்­தக கிடங்­கின் ஊழி­யர்­கள் 36 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, நேற்று அங்கு 49 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர். ஏழு வாரங்களில் இது ஆக அதிக எண்­ணிக்­கை­யா­கும்.