சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்கா: நூறாயிரம் பேருக்கு மேல் மரணம்

அமெரிக்காவில் கொவிட்-19 கிருமி தலைகாட்டிய நான்கு மாத காலத்திற்குள், அந்த நோய்த்தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நூறாயிரத்தைத் தாண்டிவிட்டது.

அந்நாட்டில் இதுவரை 1.7 மில்லியன் பேரை கொரோனா கிருமி தொற்றிவிட்டது. இது, உலகளவில் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த பாதிப்பில் கிட்டத்தட்ட 30% எனக் கூறப்படுகிறது.

முதன்முதலாக இவ்வாண்டு ஜனவரி 21ஆம் தேதி அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவானது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகளின்படி, அந்த நாட்டில் இதுவரை 100,442 பேரை கொரோனா கிருமி பலிகொண்டுவிட்டது.

கடந்த 44 ஆண்டுகளில் கொரியா, வியட்னாம், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடந்த போர்களிலும் சண்டைகளிலும் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையும் கிருமித்தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கையும் ஏறத்தாழ ஒன்றாகவே உள்ளது என பிபிசி செய்தி குறிப்பிட்டு உள்ளது.

அதேபோல, 1981 முதல் 1989 வரை எய்ட்ஸால் இறந்தவர்களைக் காட்டிலும் கொரோனா கிருமி அதிகமான உயிர்களைப் பலிவாங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் அதிகமானவர்கள் உயிரிழந்த நாடாக அமெரிக்கா விளங்கினாலும், உயிரிழப்பு விகிதத்தைப் பொறுத்தமட்டில் அந்த நாடு ஒன்பதாமிடத்தில் இருக்கிறது.

ஆக அதிகமாக பெல்ஜியத்தில் 10,000 பேருக்கு எட்டுப் பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர். அமெரிக்காவில் இந்த விகிதம் 10,000 பேருக்கு மூன்று பேர் என இருக்கிறது.

இந்த மாதத்தில் அங்கு சராசரியாக நாளொன்றுக்கு 1,400 பேர் கிருமித்தொற்றால் மரணமடைந்தனர். கடந்த ஏப்ரலில் இது 2,000ஆக இருந்தது.

கடந்த வாரம் அமெரிக்காவின் 20 மாநிலங்களில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதேபோல, சிகாகோ, லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற பெருநகரங்களிலும் கிருமி பாதிப்பு தொடர்ந்து அதிகளவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இருப்பினும், நியூயார்க் உட்பட கடுமையாக பாதிக்கப்பட்ட சில மாநிலங்களில் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. நியூயார்க்கில் மட்டும் கிட்டத்தட்ட 21,000 பேர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர்.

இவ்வேளையில், தமது நிர்வாகம் சரியாகச் செயல்படாமல் இருந்திருந்தால் உயிரிழப்பு 25 மடங்கு அதிகமாக இருந்திருக்கும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் டிரம்ப் அரசாங்கம் மந்தமாகச் செயல்பட்டு வருவதாக விமர்சகர்கள் குறைகூறி வருகின்றனர்.

மாநில ஆளுநர்களும் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர் என்பது விமர்சகர்களின் வாதம்.

இதற்கிடையே, கொரோனா பரவல் காலத்தில் ஏறத்தாழ 39 மில்லியன் அமெரிக்கர்கள் வேலைகளை இழந்துவிட்டதால் மாநிலங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவேண்டும் என அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

அதற்கேற்ப, அனைத்து மாநிலங்களும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon