கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது தாய்லாந்து

பேங்காக்: தாய்லாந்தில் அடுத்த வாரம் ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும் கூடுதலான தொழில் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதைத் தொடர்ந்து அரசாங்கம் நேற்று இதனைத் தெரிவித்தது.

நாளை மறுதினம் (ஜூன் 1) முதல் திரையரங்குகள் திறக்கப்படலாம். ஆனால், ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் திரளக்கூடாது. அதோடு, சமூக பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று  அந்நாட்டு தேசிய பாதுகாப்பு மன்றத்தில் தலைமைச் செயலாளர் சொம்சாக் ரூங்சிதா தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருக்கும் நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்படவுள்ளது. அதாவது, இரவு 11 மணி அதிகாலை 3 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருக்கும்.

தாய்லாந்தில் இம்மாத தொடக்கத்தில் கடைத்தொகுதிகள் திறக்கப்பட்டுவிட்டன. அவை செயல்படும் நேரமும் நீட்டிக்கப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விலங்கியல் தோட்டங்கள், அழகு பராமரிப்பு நிலையங்கள், உடற்பிடிப்பு நிலையங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், சமூக பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் இருக்க வேண்டும்.

காற்பந்துத் திடல்கள், வாலிபால் மற்றும் கூடைப்பந்து அரங்குகளையும்  பயிற்சி செய்வதற்காக மக்கள் பயன்படுத்தலாம். ஆனால், அங்கு பார்வையாளர்கள் திரள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

உடற்பயிற்சிக் கூடங்களும் திறக்கப்படலாம். ஆனால், ஒரே நேரத்தில் அங்கு கூடுபவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் தாய்லாந்தில் இவ்வாண்டு இரண்டு மில்லியன் வேலைகள் வரை இழக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுப்பயணத் துறை கடும் பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளது. இவ்வாண்டு தாய்லாந்து பொருளியல் 5 முதல் 6 விழுக்காடு வரை சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தாய்லாந்தில் நேற்று புதிதாக 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் குவைத்திலிருந்து வந்தவர்கள் என்றும் தாய்லாந்து வந்தவுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.