ஜூன் 30ஆம் தேதி வரை அனைத்துலக பயணக் கட்டுப்பாடுகளை சீனா நீட்டிக்கும்

பெய்ஜிங்: சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்புகள் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்துலக பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்க திட்டமிடுகிறது என்று பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட பயண ஆலோசனைக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து சீனாவுக்கு வரும் பயணிகள் மூலம் கொரோனா கிருமித்தொற்று பரவக்கூடும் என்ற அச்சத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தனது நாட்டுக்கு வரும் அனைத்துலக பயணங்களின் எண்ணிக்கையை சீனா பெருமளவில் குறைத்துள்ளது.

“ஐந்தில் ஒன்று” எனும் கொள்கையின்படி, சீனாவின் விமானங்கள் எந்த ஒரு நாட்டுக்கும் வாரத்துக்கு ஒரு முறைதான் செல்லும். அதேபோல் வெளிநாட்டிலிருந்து வாரத்துக்கு ஒரு விமானச் சேவைதான் சீனாவுக்கு வரும்.

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு எந்தவொரு விமானமும் இப்போது வருவதில்லை. சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்கா சீனப் பயணங்களை நிறுத்தி விட்டது.

எட்டு நாடுகளுக்கான எல்லைக் கட்டுப்பாடுகளை சீனா விரைவில் தளர்த்தும் என்று சீனாவின் அரசாங்க ஊடகம் இந்த வாரத்தின் முற்பகுதியில் அறிவித்தது.

இதன் மூலம் அதன் மக்களின் சில பிரிவினர் சில நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம்.

சீனப் பெருநிலத்தில் தரையிறங்குவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் அனுமதி கோரினால் அது அனுமதிக்கப்படும் என்றும் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் கூறியது.

இதுவரை அனுமதி பெற்றுள்ள நாடுகள் சிங்கப்பூர், ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகியவை.