நாளை முதல் பேருந்து, ரயில் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பும்

நாளை முதல் பேருந்து, ரயில் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பும்

1 mins read
d26eaed8-856a-42e2-bca1-27b4abfd5871
ரயில் இருக்கையில் உள்ள ஒட்டுவில்லை ஒன்றை அகற்றும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். படம்: சாவ் பாவ் -

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தளர்த்தப்படும் வேளையில் நாளை (ஜூன் 2) முதல் கூடுதலானோர் வேலைக்குத் திரும்புவர்.

அதன் பொருட்டு பேருந்து, ரயில் சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்புவதைப் பயணிகள் எதிர்பார்க்கலாம். கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடப்புக்கு வருவதற்கு முன்னர் இருந்த நிலைக்கு பொதுப் போக்குவரத்து சேவைகள் திரும்பும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் இன்று (ஜூன் 1) தெரிவித்தது.

ரயில், பேருந்துச் சேவைகள் குறுகிய இடைவேளையில் இயங்கும். ரயில் சேவை இயங்கும் நேரமும் வழக்கநிலைக்குத் திரும்பும்.

எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்துச் சேவைகள், குறிப்பாக பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லும் சேவைகள் தொடர்ந்து நிறுத்திவைக்கப்படும். அத்தகைய சேவைகளுக்கான தேவை தொடர்ந்து குறைவாக இருக்கும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.

மேலும் அதிகமானோர் பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துவர் என்பதால் அவர்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில் சவால்கள் நிலவும்.

இதனைக் கருத்தில்கொண்டு பேருந்து, ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகபட்ச ஆற்றல் நிலைக்கு உயர்த்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் முன்னதாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவிருப்பதால் பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது சிரமமாக இருக்கும். எனவே பேருந்து, ரயில்களில் உள்ள இருக்கைகளில் ஒட்டப்பட்டிருக்கும் ஒட்டுவில்லைகள் நீக்கப்படும் என்று திரு கோ தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்