சுடச் சுடச் செய்திகள்

கறுப்பின ஆடவர் மரணம்: கட்டுக்கடங்காமல் செல்லும் ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் ஒருவர் துன்புறுத்தலின் காரணமாக மரணம் அடைந்ததன் எதிரொலியாக ஆர்ப்பாட்டங்கள் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் வேளையில், அவற்றைக் கட்டுப்படுத்த போலிசார் திணறி வருகின்றனர்.

வெள்ளை மாளிகைமுன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தியதால், கூட்டத்தைக் கலைக்க அதிகாரிகள் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.

அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலம், மினியபோலிஸ் நகரில்  போலிசாரின் துன்புறுத்தலால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் எனும் 46 வயது கறுப்பின ஆடவர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.

கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் அந்த போலிஸ் அதிகாரி தமது முட்டியால் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் கழுத்தின் மீது அழுத்துவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அந்த போலிஸ் அதிகாரியின் கொடிய செயலால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்கதையாகிவிட்ட நிலையில், இதற்கு நீதி கேட்கும் விதமாக கடந்த ஆறு நாட்களாக அந்நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் படுகொலைக்கு நீதி கேட்டு மினியபோலிஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நேற்று போராட்டம் நடைபெற்றபோது, எண்ணெய் லாரி ஒன்று கூட்டத்திற்குள் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் உயிருக்குப் பயந்து ஓட்டம் பிடித்தனர்.

போராட்டக்காரர்களை நோக்கிச் சென்ற அந்த லாரி கூட்டத்திற்குள் புகுந்து நின்றது. முதலில் சிதறி ஓடிய கூட்டத்தினர் பின்னர் லாரி ஓட்டுநரைப் பிடித்து சரமாரியாக தாக்கி போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

அதில் இலேசான காயங்கள் ஏற்பட்டதால் அந்த ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அந்த ஓட்டுநரின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரியாத போதிலும், வேண்டுமென்றே அவர் இதைச் செய்திருக்க வேண்டும் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் போராட்டக்காரர்கள் யாருக்கும் காயமேதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon