அடுத்த ஈராண்டுகளில் 100,000 வெளிநாட்டு ஊழியர்களுக்காக 11 தங்கும் விடுதிகள் கட்டப்படும்

அடுத்த ஈராண்டுகளில் 100,000 வெளிநாட்டு ஊழியர்களுக்காக 11 தங்கும் விடுதிகள் கட்டப்படும்

1 mins read
6d620c6b-61f2-4e95-8990-0a3a534ec1f0
செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

வெளிநாட்டு ஊழியர்களுக்காக இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 60,000 படுக்கை வசதிகள் அமைத்துத் தரப்படும் என்றும் அடுத்த ஈராண்டுகளில் மேலும் 100,000 படுக்கை வசதிகள் செய்து தரப்படும் என்றும் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த ஏற்பாடுகள் செய்து தரப்படவிருக்கின்றன. கிருமிப் பரவல் போன்ற பொதுச் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுவதிலிருந்தும் இந்த ஏற்பாடுகள் பாதுகாக்கும் என்று மெய்நிகர்வழி இன்று (ஜூன் 1) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு வோங் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் சூழல் அண்மையில் பலரது கவனத்திற்கு வந்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று கண்டவர்களில் 90 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என்பதே அதற்குக் காரணம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்காக செய்து தரப்படவுள்ள 60,000 படுக்கை இடங்களில், விரைவில் அமைக்கப்படும் தங்கும் விடுதிகளும் அடங்கும்.

நீண்டகால கண்ணோட்டத்துடன் பார்க்கையில், அடுத்த ஈராண்டுகளில் 11 தங்கும் விடுதிகள் கட்டப்படவுள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 100,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கான வசதி இருக்கும்.

தங்கும் விடுதிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யவிருப்பது இது முதன்முறை அல்ல என்று திரு வோங் கூறினார். தங்கும் விடுதிகளின் தரம் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்ற கண்ணோட்டத்துடன் இதைப் பார்க்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்