வூஹானில் கிருமியின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது

வூஹான்: சீனாவின் வூஹான் நகரத்தில் கொவிட்-19 கிருமியின் ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.

அந்த நகரில் இருந்துதான் கிருமி உலகம் முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டு மாதமாகியும் முதல் முறையாக புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று வூஹான் நகர நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

வூஹானிலிருந்து கிருமியை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்காக நகரம் முழுவதும் கிருமித் தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக சென்ற ஞாயிற்றுக்கிழமை சுமார் 60,000 பேரிடம் கிருமித் தொற்று சோதனை நடத்தப்பட்டது. இதில் நோய் அறிகுறிகள் இல்லாத கிருமித் தொற்று சம்பவங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே மீண்டும் கிருமி தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய நகரில் உள்ள 11 மில்லியன் மக்களுக்கும் கிருமித் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் கடந்த இரு வாரங்களில் நோய் அறிகுறிகள் இல்லாமல் 200 பேருக்கு கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உலக முழுவதும் நோய் அறி குறிகள் இல்லாதவர்களிடமிருந்துதான் கிருமித்தொற்று அதிவேகமாகப் பரவுகிறது.

அறிகுறிகள் இல்லாதவரை கண்டு பிடிப்பதும் அவ்வளவு எளி தாக இல்லை. இவர்களை தனிமைப்படுத்தி வைக்க முடியாததால் கிருமிப் பரவலைத் தடுக்க முடிய வில்லை.

வூஹானில் அறிகுறிகள் இல்லாத கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது. இதனால் நோய் அறிகுறிகள் இல்லாத நோய்த் தொற்றுச் சம்பவங்களும் இல்லாத நகரமாக வூஹான் மாறியுள்ளது.