செய்திக்கொத்து (5-6-2020) உலகம்

மற்றொரு நபரும் காவலில் மரணம்

வாஷிங்டன்: ஜார்ஜ் ஃபுளோய்ட்டின் மரணம் அமெரிக்காவில் புயலை கிளப்பியுள்ள வேளையில் இதற்கு முன் கடந்த மார்ச் மாதம் 33 வயது மேனுவேல் எல்லிஸ் என்பவரும் போலிஸ் காவலில் இறந்துள்ளார். நேற்று வெளியிட்ட பிரேதப் பரிசோதனையில் வாஷிங்டனில் உள்ள டகோமாவில் அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்தச்சம்பவமும் கொலையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி

பெய்ஜிங்: கொவிட்-19 பரவல் காரணமாக வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க சீனா முன்வந்துள்ளது. இதனால் அமெரிக்க விமானங்கள் சீனாவில் நுழைய அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. ஆனால் சில வரம்புகளுக்கு உட்பட்டு வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் கூறியுள்ளது.


ஜூன் 29ல் நஜிப் வழக்கு விசாரணை

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் மீதான 1எம்டிபி நிதி மோசடி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்காப்பு தரப்பினர் அவகாசம் கேட்டதால் வழக்கு ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


முகைதீன் பணிக்குத் திரும்பினார்

கோலாலம்பூர்: பிரதமர் முகைதீன் 14 நாட்கள் தனிமையில் இருந்த பிறகு நேற்று அலுவலகப் பணிக்குத் திரும்பினார். அமைச்சரவையில் உள்ள அதிகாரி ஒருவருக்கு கிருமித்தொற்று இருந்ததால் கடந்த வாரம் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.