மலேசியா: ஜூன் 10ல் சிகை அலங்காரக் கடைகள் திறப்பு

1 mins read
efa3f1f1-016d-4c51-916f-1e08d0f79ebe
மலேசியாவில் கொரோனா நெருக்கடியால் மூடப்பட்டிருக்கும் காலைநேரச் சந்தைகள், இரவுச் சந்தைகள், பொதுச் சந்தைகள் ஜூன் 15ஆம் தேதி செயல்படத் தொடங்கும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் கூறினார். படம்: ஏஎப்பி -

புத்ராஜெயா: மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக மூடப்பட்டு இருக்கும் சிகை அலங்காரக் கடைகள், முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை ஜூன் 10 முதல் செயல்படத் தொடங்கும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.

திறந்த சந்தைகள், காலைநேரச் சந்தைகள், இரவுச் சந்தைகள், பொதுச் சந்தைகள் ஜூன் 15ஆம் தேதி செயல்படத் தொடங்கும் என்று அவர் கூறினார்.

இருந்தாலும் சந்தைகளையும் கடைகளையும் நடத்துவோர், வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோர் கடுமையான நிபந்தனைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளை அவர்கள் மீறக்கூடாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இப்போது நடப்பில் உள்ள, நிபந்தனைகளுடன் கூடிய மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பிலான முடிவு பற்றி இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் முகைதீன் யாசின் பல விவரங்களை வெளியிடுவார் என்றும் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி தெரிவித்தார்.

மலேசியாவில், நேற்றுப் பிற்பகல் நிலவரப்படி மொத்தம் 8,304 பேரைக் கிருமி தொற்றி இருந்தது. 6,635 பேர் குணமடைந்து இருந்தனர். கொரோனா கிருமித்தொற்றுக்கு 117 பேர் பலியாகிவிட்டனர்.