அமெரிக்கா: ஜோ பைடன் வேட்பாளர்

1 mins read
c13dc3ab-240c-4d05-a295-ce1984de33ca
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வரும் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வரும் நவம்பரில் நடக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர், குடியரசுக் கட்சி வேட்பாளராக களம் இறங்க இருக்கும் இப்போதைய அதிபர் டோனால்ட் டிரம்ப்பை ஒரு கை பார்ப்பார்.

ஜோ பைடன், 77, ஜனநாயகக் கட்சியின் மொத்த பேராளர்கள் 3,979 பேரில் 1,991 பேரின் ஆதரவைப் பெற்றதன் மூலம் அந்தக் கட்சியின் வேட்பாளராகும் தகுதியைப் பெற்றார்.

அமெரிக்காவின் 47வது துணை அதிபராக 2009 முதல் 2017 வரை பதவி வகித்த ஜோ பைடன், வரும் ஆகஸ்ட்டில் நடக்கும் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் கட்சி வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. அதில் இப்போதைய அதிபர் டிரம்ப், 73, மீண்டும் வெள்ளை மாளிகையைக் கைப்பற்ற வியூகம் வகுத்து வருகிறார்.

கொரோனா கிருமித்தொற்றும் அண்மைய இனவெறிச் சம்பவமும் தேர்தலில் மிக முக்கிய இடம்பெறும் என்று தெரிகிறது.

அதிபர் டிரம்ப், கொவிட்-19 பாதிப்புகள் விரைவில் முடிந்துவிடும் என்றும் மே மாதம் குறிப்பிடத்தக்க அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதை உடனடியாக மறுத்த ஜோ பைடன், இன்னமும் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் வேலையில்லாமல் தவிப்பதைச் சுட்டினார்.