வாஷிங்டன்: போலிஸ் காவலில் கறுப்பின ஆடவர் மரணமடைந்ததால் அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவி வருகின்றன. நேற்று முன்தினம் 12வது நாளாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
அமெரிக்காவின் மினசோட்டாவின் மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் ஃபுளோய்ட் எனும் கறுப்பின ஆடவர் போலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.
போலிஸ் அதிகாரி ஒருவர் தமது முட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்களாக ஃபுளோய்டின் கழுத்தை அழுத்தி பிடித்ததைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
மூச்சுவிட முடியவில்லை என்று கூறிய ஃபுளோய்ட் பின்னர் உயிரிழந்தார். இதையடுத்து நாடு முழுவதும் பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திரு ஃபுளோய்டின் மரணத்துக்குக் காரணமான போலிஸ் அதிகாரி பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது உடனிருந்த மற்ற மூன்று போலிஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். நால்வர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் பல்லாயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் பேரணியாகச் சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளை மாளிகைக்கு வெளியே திரள்வதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சலிஸ், சான் ஃபிரான்சிஸ்கோ உள்ளிட்ட பெரிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதி கேட்டு பேரணியாகச் சென்றனர்.
திரு ஃபுளோய்ட் பிறந்த வட கரோலினா மாநிலத்தில் மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, இனவெறி எதிர்ப்புப் பேரணிகள் பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமடைந்துள்ளன.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள நாடாளுமன்றச் சதுக்கத்தில் பெருமளவில் மக்கள் திரண்டனர். கொரோனா கிருமி பரவும் அபாயம் காரணமாக மக்கள் ஒன்றுகூட வேண்டாம் என்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோரிக்கையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். ஆஸ்திரே லியாவில் சிட்னி, மெல்பர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களிலும் பெரியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்நாட்டில் பழங்குடி யினர் பாகுபாடுடன் நடத்தப்படும் விதம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடு களிலும் இதுபோன்ற ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன.

