எதையும் மூடி மறைக்கவில்லை என்கிறது சீனா

எதையும் மூடி மறைக்கவில்லை என்கிறது சீனா

2 mins read
cc2e2f39-cd6b-4254-b993-9bfc1deb8af4
சீனாவின் பெய்ஜிங் நகரிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் முகக்கவசம் அணிந்தபடி செல்லும் வாடிக்கையாளர்கள். படம்: இபிஏ -

பெய்ஜிங்: கொரோனா கிருமிப் பரவல் விவகாரத்தில் தகவல்களை மூடி மறைத்துவிட்டதாகக் கூறப் படுவதை சீனா மறுத்துள்ளது.

வெளிப்படையாகவும் அப்போதைக்கு அப்போது கிருமிப் பரவல் தொடர்பான விவரங்களை உலகத்தோடு பகிர்ந்துகொண்டதாகவும் புதிதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சீனா தெரிவித்துள்ளது.

"சில அரசியல்வாதிகளும் சில ஊடகங்களும் கிருமி விவகாரத்தை அரசியலாக்குகின்றன," என்று பெய்ஜிங்கில் பேசிய தகவல் மன்ற அலுவலகத்தின் தலைவர் ஸு லு லின் கூறினார்.

"சீனாவில்தான் கிருமி தோன்றியது, சீனா கிருமியை மறைத்துவிட்டது, இதற்கு சீனாதான் பொறுப்பு என்று அடிப்படையற்ற, காரணமில்லாத, அறிவியலற்ற முறையில் திரித்து கூறப்படுகிறது," என்று அவர் சொன்னார்.

உலகம் முழுவதும் இதுவரை கொரோனா கிருமிக்கு 400,000 பேர் பலியாகிவிட்டனர். இந்தப் பிரச்சினையில் அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளும் சீனாவை குற்றம்சாட்டி வருகின்றன.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கொரோனா கிருமிப் பரவலை சீனா கட்டுப்படுத்த தவறியதால் உலகம் முழுவதும் பரவிவிட்டதாக தொடர்ந்து கூறி வருகிறார்.

ஆனால் இதனை சீனா தொடர்ந்து மறுத்துவருகிறது.

கொரோனா கிருமிக்கு எதிராகப் போராடும் நாடுகளுக்கு மருந்து களையும் மருத்துவர்களையும் சீனா அனுப்பி வருகிறது.

உலக மக்களின் நன்மைக்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் உறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையே கொரோனா கிருமிக்கு எதிரான தடுப்பூசியை மேற்கத்திய நாடுகள் கண்டுபிடிப் பதை சீனா தடுக்கவும் தாமதப் படுத்தவும் முயற்சி செய்கிறது என அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டர் ரிக் ஸ்காட் குற்றம் சாட்டியுள்ளார்.

"தடுப்பூசியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக எங்களுடைய பணியை நாசம் செய்யவோ தாமதமாக்கவோ சீனாவின் கம்யூனிசக் கட்சி முயற்சி செய்வதற்கான ஆதாரம் கிடைத்து உள்ளது," என்றார் அவர்.

"நாங்கள் முதலில் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கக்கூடாது என்று சீனா நினைக்கிறது. அவர்களே தடுப் பூசியைக் கண்டுபிடித்து அமெரிக் காவுக்கும் ஜனநாயகத்துக்கும் ஆலோசகராக இருக்க சீனா முடிவு செய்துள்ளது," என்று திரு ரிக் ஸ்காட் மேலும் தெரிவித்தார்.