புத்ராஜெயா: வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்கள், நாளை முதல் தங்கள் வீடுகளிலேயே தனித்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு அங்கீகரித்துள்ள தனிமை இடங்களில் தங்குவதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாஃப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
மலேசியா திரும்பும் மக்கள் விமான நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாருக்காவது கொவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்தால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.
தொற்று இல்லை என்றால் 14 நாட்கள் கட்டாயமாக அவர்கள் வீடுகளில் தனித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் விளக்கினார்.
நாடு திரும்புவோர் MySejahtera என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஒருவர் நிபந்தனைக்கு உட்பட்டு தன் வீட்டிலேயே தனித்து இருக்கிறார் என்பதை அந்தச் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
அந்தச் செயலி மூலம் அதிகாரிகள் எல்லாரையும் கண்காணித்து வருவார்கள்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதற்கு அடையாளமாக அவர்கள் கைப்பட்டையை அணிந்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் அமைச்சர் சாஃப்ரி தெரிவித்தார்.
இந்த விதிமுறைகளை மீறுவோர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு 1,000 ரிங்கிட் (S$326) அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அனைத்துலக நுழைவாயில்களில் கொவிட்-19 பரிசோதனைகளை நடத்துவதற்கான வளங்களை அரசாங்கம் அதிகரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 3 முதல் மலேசியா திரும்பியவர்களில் 50,873 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 40,805 பேர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

