கோலாலம்பூர்: மலேசியாவில் ஆளும் கூட்டணி (பிஎன்) ஒன்றாகச் சேர்ந்து அடுத்த பொதுத்தேர்தலில் களம் இறங்கும் என்று அந்த அணியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த மூன்று மாதமாக நிலையில்லாமல் பதவியில் காலத்தைக் கடத்தி வரும் அந்தக் கூட்டணி, பதவியில் தன் பிடியை இறுக்கிக் கொள்வதற்கு உதவக்கூடிய மிக முக்கிய மாற்றமாக இந்த அறிவிப்பு கருதப்படுகிறது.
ஆளும் கூட்டணிக்குப் பிரதமர் முகைதீன் யாசின் தலைமை வகிக்கிறார். அந்தக் கூட்டணி கடந்த பிப்ரவரி மாதம் அமைந்தது.
மகாதீர் முகம்மது தலைமையில் 21 மாதம் ஆட்சி நடத்தி வந்த பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை அந்தக் கூட்டணி பதவியில் இருந்து அகற்றிவிட்டது. இருந்தாலும் அரசியலில் முன்னாள் எதிரிகள் எல்லாம் சேர்ந்து இப்போதைய ஆளும் கூட்டணியை அமைத்து இருக்கிறார்கள்.
ஆளும் அணியில் பாஸ், அம்னோ ஆகிய கட்சிகளும் இடம்பெற்று இருக்கின்றன. ஆளும் கூட்டணியை முறையான கூட்டணியாக ஆக்கலாம் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை அம்னோ மற்றும் பாஸ் கட்சித் தலைவர்கள் நிராகரித்து இருக்கிறார்கள்.
ஆனால் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளரான தக்யூதீன் ஹான் ஞாயிற்றுக்கிழமையன்று தன் நிலையில் இருந்து மாறிவிட்டதாகத் தெரியவந்தது. ஆளும் கூட்டணி பொதுவான ஓர் ஏற்பாட்டில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் இடங்களைப் பகிர்ந்துகொள்வதன் தொடர்பில் தாங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இப்போதைய ஆளும் கூட்டணி உறுப்பினர்களுக்கு இடையே நிலவும் ஒத்துழைப்பும் சகிப்புத்தன்மையும் அரசாங்கத்தின் நிலையைப் பலப்படுத்தும் என்று பாஸ் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

