கோலாலம்பூர்: கட்சியின் உறுப்பினர் நிலையிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரும் அவரது ஆதரவாளர்களும் வழக்குத் தொடுத்துள்ளனர்.
பெர்சத்து தலைவர் முகைதீன் யாசின் கட்சியின் செயல் தலைவர் அல்ல என்றும் கட்சியின் பொதுச்செயலாளராக ஹம்சா ஜைனுடினின் நியமனம் செல்லாது என்றும், அவர்கள் இருவரின் கட்சி உறுப்பினர் தகுதியை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறாகவும் உள்நோக்கம் மற்றும் சதித்திட்டத்தோடு அதன் தலைவர்களை நீக்கி பெர்சத்துவை அவர்கள் கைப்பற்றியுள்ளதாக 61 பக்கம் கொண்ட அந்த வழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தாமே இன்னமும் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் மகாதீர் தமது வழக்கு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் மகாதீருடன் நீக்கப்பட்ட அவரது ஆதரவாளர்களான முக்ரிஸ், சையத் சாடிக் அப்துல் ரஹ்மான், மஸ்லி மலேக், அமிருடின் ஹம்சா, ஆகியோரும் கட்சிப் பதவிகளிலும் கட்சி உறுப்பினர்களாகவும் நீடிப்பதாக நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.

