பியோங்யாங்: தென்கொரியாவுடனான அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டிப்பதாக வடகொரியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தங்கள் நாட்டிலிருந்து தப்பித்து சென்றவர்கள், எல்லையில் துண்டுப் பிரசுரங்கள் அனுப்புவதை தென்கொரியா தடுக்கத் தவறியதாக கூறும் வடகொரியா, அந் நாட்டின் மீதான நெருக்கடியை அதிகரிக்கும் வகையில் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் இம்முடிவை எடுத்ததாக கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறுகிறது.
இதன்படி, இருதரப்பு ராணுவ தொடர்புகள், வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமையகத்திற்கும் தென்கொரிய அதிபர் அலுவலகத்திற்குமான தொடர்பு உள்ளிட்டவையும் ஜூன் 9ஆம் தேதி 12 மணி முதல் துண்டிக்கப்பட்டது.
தென்கொரியாவை 'எதிரி' என வர்ணித்துள்ள வடகொரியா, அந்நாட்டுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் தொடக்கம் இது எனவும் தெரிவித்துள்ளது.

