மலேசியாவில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என்னும் புதிய அம்சம் நேற்று நடப்புக்கு வந்தது. மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் பயணம் செய்வதற்கான தடை அதன் மூலம் அகற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக முடக்கிவைக்கப்பட்டு இருந்த வர்த்தக நடவடிக்கைகள் பல நேற்று மீண்டன. கிருமிப் பரவலை தடுக்கும் நோக்கில் மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்த மலேசியா ஏற்கெனவே மே 4 ஆம் தேதி சில தளர்வுகளை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உற்பத்தி நிறுவனங்களும் அத்தியாவசியச் சேவைகளும் அப்போது மீண்டும் பணிகளைத் தொடங்கின.
தளர்வுடன் கூடிய புதிய ஆணைக்கு இணங்க நேற்று சிகை அலங்காரக் கூடங்கள், அழகு பராமரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட ஏராளமான வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. தமது சங்கத்தில் உறுப்பினராக உள்ள சிகை அலங்காரக் கடைகளில் அடுத்த இரு வாரங்களுக்கு முழுவதுமாக சேவைக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக மலேசிய முடிதிருத்துவோர் சங்கத் தலைவர் மைக்கல் போ தெரிவித்தார்.
போக்குவரத்து நிலையங்களில் மக்கள் நேற்றுக் காலை முதல் வரிசை பிடிக்கத் தொடங்கினர். குறிப்பாக, தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிடிஎஸ் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்கு வந்த பயணிகளுக்கு உடல்வெப்பம் சோதிக்கப்பட்டது. பாதுகாப்பு இடைவெளி நடை
முறைகளையும் அவர்கள் பின்பற்றினர். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேம்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர இதர பகுதிகளில் போக்குவரத்துகள் இயங்கின. அதே நேரம் நாட்டின் அனைத்துலக எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, இம்மாதம் 24ஆம் தேதி முதல் பள்ளிகளைக் கட்டம் கட்டமாகத் திறக்க அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக கல்வி அமைச்சர் முகம்மது ரட்ஸி முகம்மது ஜிடின் தெரிவித்து உள்ளார். நாடு மீட்சியடையும் பாதையில் அடி எடுத்து வைத்திருப்பதால் மூன்று மாதங்களுக்குப் பிறகு வர்த்தகங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன.
பொது தேர்வுகளையும் அனைத்துலகத் தேர்வுகளையும் எதிர்நோக்கும் மாணவர்கள் முதற்கட்டமாக பள்ளிகளில் அனுமதிக்கப்படுவர். பள்ளிகளை மீண்டும் திறப்பதன் மூலம் 2,440 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500,000 மாணவர்கள் வகுப்புகளுக்குத் திரும்புவர்.
தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார அமைச்சு ஆகியவற்றுடன் கலந்து பேசிய பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டதாக நேற்று தெைலைக்காட்சியில் பேசிய போது அமைச்சர் குறிப்பிட்டார்.

